தாளவாடி அருகே பரபரப்பு தோட்டத்துக்குள் புகுந்து யானைக்கூட்டம் அட்டகாசம்


தாளவாடி அருகே பரபரப்பு தோட்டத்துக்குள் புகுந்து யானைக்கூட்டம் அட்டகாசம்
x
தினத்தந்தி 27 Dec 2021 1:59 AM IST (Updated: 27 Dec 2021 1:59 AM IST)
t-max-icont-min-icon

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தாளவாடி
தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 
10 வனச்சரகங்கள்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, கேர்மாளம், ஆசனூர், ஜீர்கள்ளி, தலமலை, டி.என்.பாளையம், கடம்பூர், விளாமுண்டி ஆகிய 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, செந்நாய், மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இதில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய நிலங்களுக்குள் யானைகள் புகுந்து விடுகின்றன.
யானை கூட்டம் 
இந்த நிலையில் ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உள்பட்ட மல்லன்குழி கிராமத்தில் வனப்பகுதியைெயாட்டி உள்ள மானாவாரி விவசாய தோட்டத்துக்குள் நேற்று அதிகாலை 5 மணி அளவில் 15 யானைகள் புகுந்தன. 
யானைகள் கூட்டமாக புகுந்ததை கண்டதும் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் உடனே இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உதவியுடன் பட்டாசு வெடித்து யானை கூட்டத்தை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். 
2 மணி நேர போராட்டம்
குட்டியுடன் யானைகள் வந்ததால் அவைகள் அங்கும், இங்குமாக ஓடின. ஒரு கட்டத்தில் யானைகள் ஆத்திரம் அடைந்து பொதுமக்களையும், வனத்துறையினரையும் துரத்தியது. 
2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு 9 யானைகள் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றன. ஆனால் 2 குட்டி யானைகளுடன், 4 பெரிய யானைகள் அங்குள்ள புதர் மறைவில் மறைந்து நின்றன. பொதுமக்களும், வனத்துறையினரும் பட்டாசு வெடித்தும் அந்த யானைகள், வனப்பகுதிக்குள் செல்லாமல் அங்கேயே நின்றன. 
வனத்துறையினர் ரோந்து
இதையடுத்து பொதுமக்களிடம் வனத்துறையினர் கூறுகையில், ‘அந்த யானைகள் அனைத்தும் மாலையில் தானாக வனப்பகுதியில் சென்றுவிடும். எனவே அனைவரும் பத்திரமாக வீட்டுக்கு செல்லுங்கள். மீண்டும் கிராமத்துக்குள் யானைகள் புகாதவாறு பார்த்துக்கொள்கிறோம்,’ என்றனர். 
இதனால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து தங்களுடைய வீடுகளுக்கு சென்றனர். இதைத்தொடர்ந்து கிராமத்துக்குள் யானைகள் புகுந்துவிடாதவாறு வனத்துறையினர் ரோந்து வந்தனர். தோட்டத்துக்குள் யானைகள் புகுந்து அட்டகாசம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
1 More update

Next Story