புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அரசு போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்கள் மனு அளித்தனர்.
கோவை
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அரசு போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்கள் மனு அளித்தனர்.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் சமீரன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து, உரிய தீர்வு காண அறிவுறுத்தினார்.
கூட்டத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் நல அமைப்பினர் கொடுத்த மனுவில், கடந்த 2016-ம் ஆண்டு முதல் உயராமல் இருக்கும் அகவிலைப்படியை உயர்த்தி 76 மாத நிலுவை தொகையுடன் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தை அமலாக்க வேண்டும். அரசு நிதிநிலை அறிக்கையில் ஓய்வூதியத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். காலி பணியிடங்களில் வாரிசுதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
முதியோர் உதவித்தொகை
பூலுவப்பட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த கணேசம்மாள்(வயது 65) அளித்த மனுவில், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு எனது கணவர் இறந்து விட்டார். மேலும் 2 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. எனக்கு எந்த வருமானமும் இல்லாததால் உணவு மற்றும் அடிப்படை தேவைகளுக்கு சிரமப்படுகிறேன். என்னை போல முகாமில் 40-க்கும் மேற்பட்ட முதியவர்கள் உள்ளனர். எனவே உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் ரபிக் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில், கேரள அரசு போக்குவரத்து கழக கிளை அலுவலகம் ராமநாதபுரம்-திருச்சி சாலையில் உள்ளது. இங்கு பணிபுரிந்து வரும் சுமைதூக்கும் தொழிலாளர்கள், டிரைவர்களுக்கு 2 ஆண்டுகளாக வழங்கப்படாத மாத ஊதியம் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
நில ஆவணங்களில் முறைகேடு
இதேபோன்று கலங்கல் கிராமத்தில் பெரிய பழனி என்ற ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவருக்கு சொந்தமான நில ஆவணங்களில் முறைகேடு நடந்து உள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று அருந்ததியர் முன்னேற்ற கழகத்தினர் மனு அளித்தனர்.
மேலும் தொண்டாமுத்தூர், ஆலாந்துறை உள்பட பல்வேறு பகுதியில் தினக்கூலி செய்து வரும் வீடு இல்லாதவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மனு கொடுத்தனர். கூட்டத்தில் மொத்தம் 523 மனுக்கள் பெறப்பட்டன.
Related Tags :
Next Story






