புகார் பெட்டி

புகார் பெட்டி
குவிந்து கிடக்கும் குப்பைகள்
கோவை மாநகராட்சி 55-வது வார்டு பரமேஸ்வரன் லே அவுட் இ.எஸ்.ஐ. மருத்துவமனை முன்பு குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக அங்கு வந்து செல்பவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே குப்பைகளை உடனுக்குடன் அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முத்து, பாப்பநாயக்கன்பாளையம்.
சாலையில் பள்ளங்கள்
கோவை உப்பிலிபாளையத்தில் உள்ள அவினாசி பாலத்தில் இருந்து மரக்கடை செல்லும் வழியில் பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் உள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே சாலையில் உள்ள பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்பாஸ், கோவை.
கூடுதல் போலீசார் பணியமர்த்துங்கள்...
கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பிரதான சாலையில் 6 சாலைகள் சந்திக்கும் அரவேனு பஜார் அமைந்து உள்ளது. இந்த வழியாக வார விடுமுறை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா வாகனங்கள் வந்து செல்வதால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கூடுதல் போலீசாரை பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மனோகரன், அரவேனு.
மரக்கிளைகளால் விபத்து அபாயம்
கோவை நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே அவுட் சாலை சந்திக்கும் பகுதியில் மரக்கிளைகளை வெட்டி சாலையோரம் அப்படியே போடப்பட்டு உள்ளன. இதன் காரணமாக அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மரக்கிளைகளை அகற்ற வேண்டும்.
சங்கர், நியூ சித்தாபுதூர்.
கடும் துர்நாற்றம்
கோவை ஆவாரம்பாளையம் புதியவர் நகரில் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள் நீண்ட நாட்களாக அள்ளப்படாமல் கிடக்கிறது. இதனால் பிளாஸ்டிக் கவர்கள் காற்றில் பறந்து அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு வருகின்றன. மேலும் அந்த பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே குப்பைகள் அள்ள சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரவி, ஆவாரம்பாளையம்.
தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்
கிணத்துக்கடவு சார்பதிவாளர் அலுவலகத்துக்கு தினமும் ஏராளமானோர் பத்திரப்பதிவு செய்ய வருகின்றனர். இவர்கள் தங்களது வானங்களை சாலையோரத்தில் தாறுமாறாக நிறுத்துவதால், அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரியசாமி, கிணத்துக்கடவு.
ஒளிராத தெருவிளக்குகள்
கோவை ஆவாரம்பாளையம் புது பாலத்தில் தெருவிளக்குகள் சரிவர ஒளிருவது இல்லை. இதனால் அந்த பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதை பயன்படுத்தி வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே தெருவிளக்குகளை ஒளிர செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும்.
முத்துகுமார், பாப்பநாயக்கன்பாளையம்.
பழுதான மின்கம்பம்
கோவை தெலுங்குபாளையம் குழந்தை நாயக்கர் தோட்டத்தில் மிகவும் பழுதான நிலையில் மின்கம்பம் ஒன்று நிற்கிறது. மேலும் மின்கம்பிகளும் பழுதடைந்த நிலையில் உள்ளன. இதனால் அங்கு அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. எனவே புதிய மின்கம்பம் அமைத்து, மின்கம்பிகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலா, தெலுங்குபாளையம்.
புதர் சூழ்ந்த மயானம்
கோவை குறிச்சி காந்திஜி ரோட்டில் அமைந்துள்ள மயானம் உரிய பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது. அங்கு புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளதோடு சமூக விரோத செயல்களும் அரங்கேறுகின்றன. இதனால் இறந்தவரின் ஈமச்சடங்குக்கு அங்கு சென்று வரும் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே மயானத்தை சூழ்ந்து உள்ள புதர் செடிகளை வெட்டி அகற்றி தொடர்ந்து முறையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜாராம், குறிச்சி.
குப்பைகளை தரம் பிரித்து போடுங்க...
கோவை சித்தாபுதூர் திருவள்ளுவர் சாலையில் மக்கும் குப்பை, மக்காத குப்பையை தனித்தனியாக பிரித்து போடுவதற்கு இடம் ஒதுக்கப்பட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் குப்பைகளை தரம் பிரிக்காமல் சிலர் போட்டு செல்கின்றனர். எனவே குப்பைகளை தரம் பிரித்து போட மாநகராட்சி நிர்வாகத்தினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
ராஜா, கோவை.
Related Tags :
Next Story






