ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில் வனப்பணியாளர்களுக்கு 2 நாட்கள் திறன்மேம்பாட்டு பயிற்சி

ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில் வனப்பணியாளர்களுக்கு 2 நாட்கள் திறன்மேம்பாட்டு பயிற்சி
வால்பாறை
ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில் வனப்பணியாளர்களுக்கு 2 நாட்கள் திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
திறன்மேம்பாட்டு பயிற்சி
வால்பாறை அட்டகட்டியில் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வனமேலாண்மை பயிற்சி மையம் உள்ளது. இங்கு பொள்ளாச்சி கோட்ட வனப்பணியாளர்களுக்கு வனவிலங்கு குற்ற கட்டுப்பாட்டு மையம் சார்பில் வனக்குற்றங்களை தடுப்பது, வனக்குற்றங்களை தடுக்க புலனாய்வு செய்வது குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி 2 நாட்கள் நடக்கிறது.
நேற்று தொடங்கிய பயிற்சி வகுப்பை ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்ரமணியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். துணை கள இயக்குனர் கணேசன் முன்னிலை வகித்தார்.
பயிற்சி வகுப்பை மண்டல துணை இயக்குனர் டாக்டர் கிருபாசங்கர், கால்நடை கல்லூரி துறை தலைவர் முத்துகிருஷ்ணன், ஓய்வு பெற்ற மாவட்ட வன அலுவலர் சந்தரசேகரன், வனவிலங்குகள் ஆய்வாளர் மதிவாணன் உள்பட தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த வனத்துறை உயர் அதிகாரிகள் நடத்தினர்.
வனக்குற்றங்களை தடுப்பது
பயிற்சி வகுப்பில் வனக்குற்றங்களை தடுப்பது, வனக்குற்றங்கள் எவ்வாறெல்லாம் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. வனக்குற்றங்கள் மூலம் கடத்தப்படக்கூடிய வனப் பொருட்கள் எவை, அவை எந்தெந்த முறையில் நவீன தொழில்நுட்பத்தில் கடத்தப்படுகின்றன என்பது குறித்து விளக்கப்பட்டது.
வனப்பகுதிக்குள் நடமாடி வரும் வனவிலங்குகளின் உடல் பாகங்கள், வனப் பகுதியில் கிடைக்க கூடிய மருத்துவ குணம் கொண்டதாக கூறப்படும் தாவரங்கள், செடி கொடிகள் அதிக விலைக்கு விற்பதற்காக சமூக விரோதிகளால் கடத்தப்படுகிறது.
எனவே வனப்பணியாளர்கள் தீவிர கண்காணிப்பு மற்றும் புலனாய்வு செய்வதில் அக்கறை காட்ட வேண்டும். தவறும் பட்சத்தில் இந்த வனப்பொருட்களை கடத்துவதையும், அதற்காக வனவிலங்குகளை வேட்டையாடுவதையும் சமூக விரோதிகள் தொழிலாக மாற்றி அதில் புதிய முறைகளை பின்பற்ற தொடங்கி விடுவார்கள்.
இதனால் வனக்குற்றங்களை தடுப்பது வனத்துறையினருக்கு சவாலாகிவிடும். எனவே வனக்குற்றங்களை கட்டுப்படுத்த வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயிற்சி வகுப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
கால்நடை சார்ந்த தகவல்கள்
வனப்பகுதியில் இறந்து கிடக்கும் வனவிலங்குகள் பறவைகள் எவ்வாறு இறந்தது, விஷம் வைத்து கொள்ளப்பட்டதா, மனிதர்களால் வேட்டையாடி கொள்ளப்பட்டதா, மின்சாரம் தாக்கி இறந்ததா என்பதை கண்டறியும் தொழில்நுட்பத்தை வனப்பணியாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட கால்நடைகள் சார்ந்த தகவல்களும் பயிற்சி வகுப்பில் எடுத்து கூறப்பட்டது.
இந்த பயிற்சி வகுப்பில் ஆனைமலை புலிகள் காப்பக பொள்ளாச்சி கோட்டத்தை சேர்ந்த வால்பாறை, மானாம்பள்ளி, பொள்ளாச்சி, உலாந்தி வனச்சரக பகுதிகளைச் சேர்ந்த வனச்சரகர்கள் காசிலிங்கம், மணிகண்டன் மற்றும் வனவர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை பயிற்சி மையத்தின் உதவி வனப் பாதுகாவலர் செல்வம், வனச்சரகர் புகழேந்தி, வனவர் முனியாண்டி ஆகியோர் செய்திருந்தனர். பயிற்சி வகுப்பு இன்றும் (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
Related Tags :
Next Story






