தொழிலாளர் துறை தொடர்ந்த வழக்கு: ஒர்க்‌ஷாப்பில் சிறுவர்களை பணிக்கு அமர்த்தியவருக்கு ரூ.18 ஆயிரம் அபராதம்- ஈரோடு கோர்ட்டு உத்தரவு


தொழிலாளர் துறை தொடர்ந்த வழக்கு: ஒர்க்‌ஷாப்பில் சிறுவர்களை பணிக்கு அமர்த்தியவருக்கு ரூ.18 ஆயிரம் அபராதம்- ஈரோடு கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 28 Dec 2021 3:32 AM IST (Updated: 28 Dec 2021 3:32 AM IST)
t-max-icont-min-icon

ஒர்க்‌ஷாப்பில் சிறுவர்களை பணிக்கு அமர்த்தியது தொடர்பாக தொழிலாளர் துறை தொடர்ந்த வழக்கில் ஒர்க்‌ஷாப் உரிமையாளருக்கு ரூ.18 ஆயிரம் அபராதம் விதித்து ஈரோடு கோர்ட்டு உத்தரவிட்டது.

ஈரோடு
ஒர்க்‌ஷாப்பில் சிறுவர்களை பணிக்கு அமர்த்தியது தொடர்பாக தொழிலாளர் துறை தொடர்ந்த வழக்கில் ஒர்க்‌ஷாப் உரிமையாளருக்கு ரூ.18 ஆயிரம் அபராதம் விதித்து ஈரோடு கோர்ட்டு உத்தரவிட்டது.
2 சிறுவர்கள்
ஈரோடு இடையன்காட்டு வலசு சின்னமுத்து வீதியில் இயங்கி வரும் ஒர்க்‌ஷாப்பில் (வாகன பழுது பார்க்கும் நிலையம்) சிறுவர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டு இருந்ததாக ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகத்துக்கு புகார் வந்தது. அதன்பேரில் தொழிலாளர் துறை அதிகாரிகள் கடந்த 1-3-2021 அன்று சோதனை செய்தனர்.
அப்போது 14 வயது பூர்த்தி அடையாத சிறுவர்கள் 2 பேர் அங்கு பணியில் அமர்த்தப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் (தடை செய்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் 1986-ன் கீழ், சம்பந்தப்பட்ட ஒர்க்‌ஷாப் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ரூ.18 ஆயிரம் அபராதம்
இதுதொடர்பாக ஈரோடு ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தொழிலாளர் துறை அதிகாரிகள் வழக்கு தொடர்ந்தனர். மாஜிஸ்திரேட்டு வழக்கை விசாரித்து தீர்ப்பு கூறினார்.
அந்த தீர்ப்பில் 2 சிறுவர்களை (வளர் இளம் பருவத்தினர்) பணியில் ஈடுபடுத்திய குற்றத்துக்காக ஒர்க்‌ஷாப் உரிமையாளருக்கு ரூ.18 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
எச்சரிக்கை
இதுதொடர்பாக ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) வெ.மு.திருஞானசம்பந்தம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
14 வயதுக்கு உள்பட்ட சிறுவர்கள், 15 வயது முதல் 18 வயது வரையான வளர் இளம் பருவத்தினரை பணிக்கு அமர்த்துவது குற்றம். அவ்வாறு பணிக்கு அமர்த்தப்படுவது கண்டறியப்பட்டால் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும். மேலும் சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளருக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை வழங்கப்படும். அபராதம், ஜெயில் தண்டனை என 2 தண்டனைகளும் சேர்த்தும் வழங்க நேரிடும் என கடுமையாக எச்சரிக்கப்படுகிறது.
குழந்தை தொழிலாளர்கள் பணி செய்வது தொடர்பான புகார்களை 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) வெ.மு.திருஞானசம்பந்தம் கூறி உள்ளார்.

1 More update

Next Story