நம்பியூர் அருகே கல் குவாரி செயல்பட எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை- மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு


நம்பியூர் அருகே கல் குவாரி செயல்பட எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை- மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 28 Dec 2021 3:32 AM IST (Updated: 28 Dec 2021 3:32 AM IST)
t-max-icont-min-icon

நம்பியூர் அருகே கல் குவாரி செயல்பட எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு
நம்பியூர் அருகே கல் குவாரி செயல்பட எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
முற்றுகை
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது குறைகள் குறித்து மனுக்கள் அளித்தனர்.
நம்பியூர் அருகே உள்ள எலத்தூர், பள்ளத்தூர்காலனி, கேங்குழி, எலத்தூர் செட்டிப்பாளையம், கரிய கவுண்டன் பாளையம், கண்ணாங்காட்டு பாளையம் ஆகிய 6 கிராமங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனு கொடுப்பதற்காக நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அப்போது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் இல்லை. இதனால் அவர்கள், நாங்கள் கலெக்டரை நேரில் சந்தித்து தங்கள் பிரச்சினை குறித்து பேச வேண்டும் என்று கூறி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
8 ஆயிரம் குடும்பத்தினர்
 இதுபற்றி தகவல் அறிந்து, ஈரோடு ஆர்.டி.ஓ. பிரேமலதா கலெக்டர் அலுவலகம் விரைந்து வந்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள் கூறும்போது, ‘எலத்தூர் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் சுமார் 8 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியின் குடியிருப்பு மத்தியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி மற்றும் கல் அரைக்கும் ஆலை (கிரஷர்) செயல்பட்டு வருகிறது.
இந்த ஆலை எந்திரம் இருக்கும் இடத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் வீடுகள், கோவில்கள், விவசாய நிலம், மழலையர் தொடக்க பள்ளிக்கூடம் மற்றும் நடுநிலை பள்ளிக்கூடம், தாய் சேய் நல மையம், ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைந்துள்ளன.
கல் அரைக்கும் எந்திரம்
ஆலை இயக்கத்தினால் ஏற்படும் சத்தம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஆலையில் கல் அரைக்கும்போது, தூசி வெளியேறி கிராமம் முழுவதும் மாசுவை ஏற்படுத்தி வீடுகளிலும் படர்ந்துள்ளது. இதனால் மூச்சுவிட சிரமமாக உள்ளது. மேலும் கண் எரிச்சல், தலைவலி, தொண்டை வலி ஏற்படுகிறது.
கல்லை வெடி வைத்து தகர்த்து வருவதால் நில அதிர்வுகள் ஏற்பட்டு வீட்டில் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி வருவாய் துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், கனிம வளத்துறையில் புகார் செய்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி எங்கள் பகுதியில் செயல்படும் கல் அரைக்கும் ஆலைக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும்’ என்றனர்.
மூட உத்தரவு
அதற்கு ஆர்.டி.ஓ., பிரேமலதா, ‘‘நாளை (அதாவது இன்று) வருவாய் துறை, கனிம வளத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் குழு வந்து சம்பந்தப்பட்ட கல் குவாரி, மற்றும் கல் அரைக்கும் ஆலைகளில் ஆய்வு மேற்கொள்வார்கள். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கல் குவாரி செயல்பட்டால் கண்டிப்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
மேலும் கனிம வளத்துறை மூலம் கல் குவாரி மற்றும் கல் அரைக்கும் ஆலைகளை உடனடியாக மூடவும் ஆர்.டி.ஓ. உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
குளிர்பான பாட்டில்  தயாரிப்பு ஆலை
‘தி ஸ்டேட் டிரான்ஸ்போர்ட் அன்ட் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன்ஸ் ரிட்டையர்டு எம்ப்ளாயீஸ் வெல்பேர் அசோசியேசன்’ சார்பில் கொடுக்கப்பட்டு இருந்த மனுவில், ‘2015-ம் ஆண்டு முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி நிலுவைகள் வழங்க வேண்டும். மருத்துவப்படி ரூ.300 வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7 ஆயிரத்து 850 வழங்க வேண்டும். பணியின்போது இறந்தவர்களின் வாரிசுகளுக்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.
மொடக்குறிச்சி ஆனந்தம்பாளையம் ஊராட்சி வார்டு துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலெக்டரிடம் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:-
ஆனந்தம்பாளையம் ஊராட்சி, செல்லாத்தாபாளையம் பகுதியில் குரங்கன் ஓடை கரை ஓரத்தில் குளிர்பான பாட்டில் தயாரிப்பு ஆலை தொடங்குவதாக கூறி ஊராட்சி மன்றத்தின் அனுமதி இன்றி 50 சதவீதத்துக்கும் மேல் கட்டுமான பணி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
262 மனுக்கள்
இந்த நிலையில் ஆலை உரிமையாளர், ஊர் மக்களிடம் சோடா நிறுவனம் அமைப்பதாகவும், தேங்காய் குடோன் அமைப்பதாகவும், ஆயில் மில் அமைப்பதாகவும் கூறி வருகிறார். மேலும், கட்டிட வரைபட அனுமதி பெறுவதற்காக உண்மைக்கு புறம்பான தகவலை தெரிவித்து சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் ஆலை அமைக்க முயற்சித்து வருகிறார். எனவே, அந்த பகுதி மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தி, அதன் பின்னர் சம்பந்தப்பட்ட இடத்தில் கட்டிடம் கட்ட அனுமதி அளிக்கவேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
இதேபோல் மொத்தம் 262 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கூட்டத்தில் துணை கலெக்டர் (பயிற்சி) சங்கீதா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் குமரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் ரங்கநாதன், மாவட்ட வழங்கல் அலுவலர் இலாஹிஜான் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
1 More update

Next Story