கால்நடை பராமரிப்பு துறை காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்- சங்க மாநில கூட்டத்தில் கோரிக்கை


கால்நடை பராமரிப்பு துறை காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்- சங்க மாநில கூட்டத்தில் கோரிக்கை
x
தினத்தந்தி 27 Dec 2021 10:03 PM GMT (Updated: 2021-12-28T03:33:51+05:30)

கால்நடை பராமரிப்பு துறை காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று சங்க மாநில கூட்டத்தில் கோரிக்கை விடப்பட்டது.

மொடக்குறிச்சி
கால்நடை பராமரிப்பு துறை காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று சங்க மாநில கூட்டத்தில் கோரிக்கை விடப்பட்டது.
மாநில செயற்குழு கூட்டம்
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே சோலாரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு உதவியாளர் முன்னேற்ற சங்கத்தின் முதலாவது மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. 
கூட்டத்துக்கு மாநில தலைவர் கே.காமராஜ் தலைமை தாங்கினார். ஈரோடு மாவட்ட தலைவர் பி.வடிவேல்முருகன் வரவேற்று பேசினார்.
ஈரோடு மாவட்ட செயலாளர் எஸ்.சக்திவேல் கூட்டத்தை தொடங்கி வைத்தார். முன்னாள் மாநில தலைவர் பாலசுப்பிரமணியன், மாநில இணைச் செயலாளர் ராணி, மாநில துணைத்தலைவர் ரவி ஆகியோர் சங்கத்தின் வளர்ச்சி குறித்து பேசினர். மாநில செயற்குழு உறுப்பினர் அமுதா, துணைத் தலைவர் பெரியசாமி, இணைச் செயலாளர் ராஜசேகரன் உள்ளிட்ட பலர் கால்நடை பராமரிப்பு உதவியாளர் முன்னேற்ற சங்கத்தின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினர். தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 14 சங்க உறுப்பினர்களின் குடும்பத்துக்கு சங்க மாநில தலைவர் கே.காமராஜ் தலா ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-
சங்க உறுப்பினர்கள் குடும்பத்துக்கு...
* கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான கல்வித்தகுதியை 10-ம் வகுப்பு தேர்ச்சி என்று அறிவிக்க வேண்டும்.
* கொரோனா காலத்தில் பணியின்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த உறுப்பினர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்கிட வேண்டும்.
* கால்நடை பராமரிப்பு உதவியாளர்களை முன் களப்பணியாளர்களாக அரசு அறிவிக்க வேண்டும்.
* கால்நடை பராமரிப்பு பணியிடங்கள் போர்க்கால அடிப்படையில் நிரப்பப்பட வேண்டும்.
பதவி உயர்வு
* கால்நடை பராமரிப்பு உதவியாளர்களுக்கு துறையின் இதர பணியாளர்களுக்கு வழங்குவது போன்று நிரந்தர பயணப்படி வழங்கிட வேண்டும்.
* கால்நடை பராமரிப்பு உதவியாளர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதவி உயர்வு வழங்கிட வேண்டும்.
* கால்நடை பராமரிப்பு உதவியாளர்களுக்கு பயிற்சி காலத்தின்போது உரிய ஊதியத்தை வழங்க வேண்டும்.
மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எம் சிங்காரவேலு, மாநில துணைப் பொதுச் செயலாளர் சீனிவாசன், ஈரோடு மாவட்ட செயலாளர் விஜய மனோகரன், தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வி.ஜெயபால் மற்றும் தமிழகம் முழுவதும் சங்கத்தின் சார்பில் தலைவர்கள், செயலாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். முடிவில் சங்கத்தின் மாநில இணைச் செயலாளர் கே.மனோகரன் நன்றி கூறினார்.

Next Story