மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது; கல்லூரி மாணவர்கள் 2 பேர் பரிதாப சாவு


மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது; கல்லூரி மாணவர்கள் 2 பேர் பரிதாப சாவு
x
தினத்தந்தி 28 Dec 2021 3:33 AM IST (Updated: 28 Dec 2021 3:33 AM IST)
t-max-icont-min-icon

ரோட்டோர மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

ஈரோடு
ரோட்டோர மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். 
கல்லூரி மாணவர்கள்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவருடைய மகன் தருண் (வயது 17). இவர் ஈரோடு அருகே வெள்ளோட்டில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில், விடுதியில் தங்கி ஆட்டோ மொபைல் 2-ம் ஆண்டு படித்து வந்தார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஈங்கார் விளக்கு பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் என்பவரின் மகன் அபினேஷ் (19). இவர் அதே கல்லூரியில் சிவில் பிரிவில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறைக்காக தருண் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு கல்லூரி விடுதி செல்வதற்காக பரமத்தி வேலூரில் இருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு பஸ்சில் வந்தார். ஆனால் அங்கிருந்து விடுதிக்கு செல்ல பஸ் வசதி இல்லாததால் தருண், அபினேசை செல்போனில் தொடர்பு கொண்டு பெருந்துறை வருமாறு அழைத்துள்ளார்.
2 பேர் சாவு
விடுதியில் தங்கியிருந்த அபினேஷ் தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு பெருந்துறைக்கு சென்றார். பின்னர் தருணை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு 2 பேரும் விடுதிக்கு சென்று கொண்டிருந்தனர். ஈரோடு-பெருந்துறை ரோடு பவளத்தாம்பாளையம் அருகே 2 பேரும் சென்று கொண்டு இருந்தபோது, மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் நின்ற மரத்தில் பயங்கரமாக மோதியது.
இதில் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த அபினேஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். படுகாயம் அடைந்த தருண் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் தருணை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே தருண் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
வழக்குப்பதிவு
இதற்கிடையில் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ஈரோடு தாலுகா போலீசார் அபினேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
1 More update

Next Story