வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து தொழிலாளர்களுக்கு ரூ.400 கோடி விடுவிப்பு


வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து தொழிலாளர்களுக்கு ரூ.400 கோடி விடுவிப்பு
x
தினத்தந்தி 28 Dec 2021 8:03 PM IST (Updated: 28 Dec 2021 8:03 PM IST)
t-max-icont-min-icon

கோவையில், கடந்த 2 ஆண்டுகளில் வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து தொழிலாளர்களுக்கு ரூ.400 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தார்.

கோவை

கோவையில், கடந்த 2 ஆண்டுகளில் வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து தொழிலாளர்களுக்கு ரூ.400 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடி

கொரோனா முதல் மற்றும் 2-வது அலை காரணமாக தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அத்தியாவசிய நிறுவனங்கள் தவிர மற்ற நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை நிறுத்தின. கொரோனா பரவல் குறைந்த பிறகு உற்பத்தியை தொடங்கினாலும் பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டன. 

இதனால் பொருளாதார நெருக்கடி, வேலையிழப்பு போன்ற காரணங்களால் தொழிலாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு தொழிலாளர்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக தங்களது வருங்கால வைப்பு நிதி(பி.எப்.) கணக்கில் இருந்து முன்பணம் எடுத்துக்கொள்ள கடந்த 2020-ம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியது. 

அத்தியாவசிய தேவை

அதன்படி பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் 3 மாத அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படி(டி.ஏ.) அல்லது வருங்கால வைப்பு நிதி கணக்கில் உள்ள நிலுவை தொகையில் 75 சதவீதம்(இதில் எது குறைவோ அது) முன்பணமாக எடுத்து கொள்ளலாம். இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து, அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தி கொண்டனர்.

இது குறித்து வருங்கால வைப்பு நிதி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
பொதுவாக திடீர் மருத்துவ செலவு, புதிய வீடு வாங்குதல் உள்பட குறிப்பிட்ட சில காரணங்களுக்கு மட்டுமே குறைந்த அளவு பணத்தை வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து எடுக்க முடியும். அதற்கும் முறையாக பல்வேறு ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, அது சரிபார்க்கப்பட்ட பின்னர்தான் அந்த தொகையும் கிடைக்கும். 

அதிக வட்டி விகிதம்

இந்த நிலையில் பெருந்தொற்று காலம் என்பதால், எந்தவித ஆவணங்களும் இல்லாமல், தங்களது கணக்கில் பணம் இருந்தால் போதும், எடுத்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அனுமதி வழங்கியது. 

மேலும் 3 வேலை நாட்களுக்குள் தொழிலாளர்களின் பணம் வங்கி கணக்கிற்கு செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக திருப்பூர், நீலகிரி, கோவை மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை மண்டலத்தில் 1.3.2020 முதல் 17.9.2021 வரை 2,05,673 பேருக்கு ரூ.403 கோடியே 24 லட்சத்து 52 ஆயிரத்து 249 அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது. வருங்கால வைப்பு நிதிக்கு மற்ற சேமிப்புகளை காட்டிலும் அதிக வட்டி விகிதம் என்பதால் அவசிய தேவைக்கு மட்டுமே எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story