தகராறில் ஈடுபட்ட மாணவர்களுக்கு நூதன தண்டனை

கோவில் திருவிழாவில் தகராறில் ஈடுபட்ட மாணவர்களுக்கு தலா 50 திருக்குறள்களை எழுத உத்தரவிட்டு போலீசார் நூதன தண்டனை வழங்கினர்.
கோவை
கோவில் திருவிழாவில் தகராறில் ஈடுபட்ட மாணவர்களுக்கு தலா 50 திருக்குறள்களை எழுத உத்தரவிட்டு போலீசார் நூதன தண்டனை வழங்கினர்.
கோவில் விழாவில் தகராறு
கோவையை அடுத்த மதுக்கரையில் பிரசித்தி பெற்ற அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழாவையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் யானை ஊர்வலம் தொடங்கியது. இந்த ஊர்வலத்தில் மதுக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது அங்கு வந்திருந்த வாலிபர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதால் மோதலாக மாறியது. இதில் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
10 மாணவர்கள் சிக்கினர்
இதுகுறித்து மதுக்கரை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வைரம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கவியரசு உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அப்போது 10 வாலிபர்கள் மோதலில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் அவர்கள் அனைவரும் 20 வயதுக்கு உட்பட்ட கல்லூரி மாணவர்கள்.
இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து மதுக்கரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். கல்லூரி மாணவர்கள் என்பதால் வழக்குப்பதிவு செய்யாமல், அவர்கள் தவறை உணரும் வகையில் தண்டனை வழங்க போலீசார் முடிவு செய்தனர்.
அறிவுரை
அதன்படி கல்லூரி மாணவர்கள் 10 பேரையும் தலா 50 திருக்குறள் எழுதி காண்பிக்க உத்தரவிட்டனர். இதை ஏற்று மாணவர்களும் திருக்குறள் எழுத தொடங்கினர். ஆனால் அவர்கள் 10 முதல் 12 திருக்குறள்களை மட்டுமே எழுதி இருந்தனர்.பின்னர் அவர்களின் பெற்றோரை போலீசார் வரவழைத்து அறிவுரை வழங்கினர். மேலும், படிக்கும் வயதில் இதுபோன்று தகராறில் ஈடுபடக்கூடாது என்று மாணவர்களுக்கும் அறிவுரை வழங்கி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story






