நிதி நிறுவன இயக்குனர்கள் 3 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை

வாடிக்கையாளர்களிடம் ரூ.12½ லட்சம் மோசடி செய்த நிதி நிறுவன இயக்குனர்கள் 3 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
கோவை
வாடிக்கையாளர்களிடம் ரூ.12½ லட்சம் மோசடி செய்த நிதி நிறுவன இயக்குனர்கள் 3 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
நிதி நிறுவனம்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள லக்குமநாயக்கன்பட்டியில் குபேரா ஆட்டோ பைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது.
இந்த நிதி நிறுவனத்தின் இயக்குனர்களாக காங்கேயம் அருகே உள்ள தெருக்கருவம்பாளையத்தை சேர்ந்த எஸ்.டி.சாமிநாதன்(வயது 46), எஸ்.பி.முத்துவேல்(40), தாராபுரம் அருகே உள்ள தொட்டிபாளையத்தை சேர்ந்த மணிவேல்(51) ஆகியோர் செயல்பட்டனர். மேலும் ராஜேந்திர குமார், லோகநாயகி, செல்வி ஆகியோர் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தனர்.
கூடுதல் வட்டி
இந்த நிலையில் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால், குறிப்பிட்ட நாட்களுக்குள் கூடுதல் வட்டி தருவதாக வாடிக்கையாளர்களிடம் பொய்யான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டது.
இதை நம்பிய பலரும் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். அதன்படி 20 வாடிக்கையாளர்கள் ரூ.12 லட்சத்து 66 ஆயிரம் வரை முதலீடு செய்து இருந்தனர். ஆனால் அவர்களுக்கு வாக்குறுதி அடிப்படையில் வட்டி வழங்கவில்லை. மேலும் அசல் தொகையையும் திரும்ப கொடுக்கவில்லை.
10 ஆண்டு சிறை தண்டனை
இதனால் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த வாடிக்கையாளர்களில் ஒருவரான காங்கேயம் பகுதியை சேர்ந்த முத்துசாமி என்பவர் கடந்த 2015-ம் ஆண்டு கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு, கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு சிறப்பு கோர்ட்டில்(டான்பிட்) நடந்து வந்தது. அதில், 25 சாட்சிகளிடம் விசாரணை செய்யப்பட்டது.
இதையடுத்து வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி மோசடியில் ஈடுபட்ட அந்த நிறுவன இயக்குனர்கள் எஸ்.டி.சாமிநாதன், எஸ்.பி.முத்துவேல், மணிவேல் ஆகியோருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.16 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ரவி தீர்ப்பளித்தார்.
2 பேருக்கு பிடிவாரண்டு
மேலும் ராஜேந்திர குமார், லோகநாயகி, செல்வி ஆகியோர் குற்றம் புரிந்தமைக்கான முகாந்திரம் இல்லாத காரணத்தினால் விடுதலை செய்யப்பட்டனர்.
இதற்கிடையே நேற்று எஸ்.பி.முத்துவேல் மட்டுமே கோர்ட்டில் ஆஜரானார். இதனால் எஸ்.டி.சாமிநாதன் மற்றும் மணிவேல் ஆகியோருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story






