கோவையில் வழக்கத்தை விட 31 சதவீதம் கூடுதல் மழைப்பொழிவு

இந்த ஆண்டு கோவையில் வழக்கத்தை விட 31 சதவீதம் கூடுதல் மழைப்பொழிந்து உள்ளது என்று காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் தெரிவித்தார்.
கோவை
இந்த ஆண்டு கோவையில் வழக்கத்தை விட 31 சதவீதம் கூடுதல் மழைப்பொழிந்து உள்ளது என்று காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் தெரிவித்தார்.
பருவமழைகள்
தமிழகத்தில் வழக்கமாக ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரையும், வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரையும் பெய்யும். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை அக்டோபர் மாதம் 24-ந் தேதி வரை நீடித்தது.
இதையடுத்து அக்டோபர் மாதம் 26-ந் தேதிக்கு பிறகு தாமதமாக தொடங்கிய வடகிழக்கு பருவமழை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தொடர்ந்து தீவிரமாக பெய்தது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் நவம்பர் மாதம் எதிர்பார்த்ததை விட பருவமழை அதிகளவில் பெய்தது. இதன் காரணமாக கோவை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் நிரம்பின.
குளங்கள் நிரம்பின
குறிப்பாக கோவையில் குளங்களின் நீராதாரமான நொய்யல் ஆற்றிலும் தண்ணீர் பெருக்கெடுத்தது. இதனால் சொட்டையாண்டி குளம், கங்க நாராயண சமுத்திரம், பேரூர் பெரியகுளம், வாலாங்குளம், செல்வாம்பதி உள்பட பல்வேறு குளங்கள் நிரம்பின. இதுகுறித்து காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் ராமநாதன் கூறியதாவது:-
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கூடுதல் நாட்கள் பெய்ததால், வழக்கமான சராசரி அளவான 210 மில்லி மீட்டரை தாண்டி 236 மில்லி மீட்டராக பெய்தது. இதேபோல் வடகிழக்கு பருவமழை சராசரியாக 305 மி.மீ. பெய்ய வேண்டும். அதாவது அக்டோபர் மாதத்தில் 146 மி.மீ., நவம்பரில் 118 மி.மீ., டிசம்பரில் 41 மி.மீ. மழை பெய்யும்.
கூடுதலாக 31 சதவீதம்
ஆனால் இந்த ஆண்டு அக்டோபரில் 190.6 மி.மீ., நவம்பரில் 271.9 மி.மீ., டிசம்பரில் 54 மி.மீ. என மொத்தம் 517 மி.மீ. மழை பெய்துள்ளது.
கோவை மாவட்டத்தில் மொத்தமாக ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை கடந்த 50 ஆண்டுகளில் சராசரி மழையளவு 674 மி.மீ. ஆகும். ஆனால் இந்த ஆண்டு 883 மி.மீ. மழை பெய்தது. அதாவது இந்த ஆண்டு 209 மி.மீ.(அதாவது 31 சதவீதம்) கூடுதலாக பெய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story






