நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பஸ்

நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பஸ்
பொள்ளாச்சி
டயர் கிழிந்து தொங்கிய நிலையில் அரசு பஸ் நடுவழியில் பழுதாகி நின்றது. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
நடுவழியில் நின்ற அரசு பஸ்
பொள்ளாச்சி பழைய, புதிய பஸ் நிலையங்களில் இருந்து ஆனைமலை, உடுமலை, கோபாலபுரம், புரவிபாளையம், கிணத்துக்கடவு, நெகமம், சுல்தான்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் சரியான பராமரிப்பு இல்லாமல் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் பொள்ளாச்சியில் இருந்து உடுமலைக்கு சென்ற அரசு பஸ் கெடிமேட்டில் நடுவழியில் பழுதாகி நின்றது. இதனால் பயணிகள் பாதி வழியில் இறக்கி விடப்பட்டனர். அந்த பஸ்சின் டயர் தேய்ந்து கிழிந்து தொங்கியது. மேலும் டயர் பகுதியில் போல்டு இல்லாமல் இயங்கியது தெரிந்ததும் பயணிகள் பீதி அடைந்தனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
அதிகாரிகளின் அலட்சியம்
பொள்ளாச்சியில் இருந்து உடுமலைக்கு சென்ற பஸ் கெடிமேடு செல்வதற்குள் 5 முறை ஆங்காங்கே நின்றது. பஸ்சில் முன்பக்கம் வலதுபுறம் உள்ள டயரில் 8 போல்டு இருக்க வேண்டும். ஆனால் 3 போல்டு தான் இருந்தது. இதனால் அந்த பஸ் சரியாக பிரேக் பிடிக்காமல் ஆப் ஆனது.
இதற்கிடையில் கியர் போடுவதற்குள் டிரைவர் படாதபாடு பட்டார். மேலும் டயர் கிழிந்து தொங்கிய நிலையில் மிகவும் மோசமாக இருந்தது. இந்த நிலையில் தான் கெடிமேட்டில் நடுவழியில் பஸ் பழுதாகி நின்றது. இதனால் பயணிகள் தாங்கள் செல்லவேண்டிய இடத்திற்கு சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதியடைந்தனர்.
பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தும் அதிகாரிகள் பஸ் பாதுகாப்பாக இருக்கிறதா? என்று முறையாக ஆய்வு செய்வதில்லை. அதிகாரிகளின் அலட்சியத்தால் போக்குவரத்திற்கு தகுதி இல்லாத பஸ்களை இயக்கப்பட்டு வருகின்றன.
மோசமான பஸ்சிற்கு எப்படி வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தகுதி சான்று வழங்கினார்கள் என்பது தெரியவில்லை. பெரும்பாலான பஸ்களின் நிலை இதேபோன்று தான் உள்ளது. எனவே அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு இதுபோன்ற தகுதி இல்லாத பஸ்களை இயக்குவதை நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story






