வாளையாறு-காட்டம்பட்டி இடையே விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் அமைக்க எதிர்ப்பு


வாளையாறு-காட்டம்பட்டி இடையே விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் அமைக்க எதிர்ப்பு
x
தினத்தந்தி 28 Dec 2021 10:24 PM IST (Updated: 28 Dec 2021 10:24 PM IST)
t-max-icont-min-icon

வாளையாறு-காட்டம்பட்டி இடையே விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் அமைக்க எதிர்ப்பு

கிணத்துக்கடவு

வாளையாறு-காட்டம்பட்டி இடையே விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள காட்டம்பட்டியில் எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் 39 ஏக்கரில் எரிவாயு சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட உள்ளது. கேரள மாநிலம் வாளையாறில் இருந்து காட்டம்பட்டி வரை 39 கிலோ மீட்டர் தூரத்திற்கு குழாய் மூலம் சமையல் எரிவாயு கொண்டு செல்வதற்காக கடந்த 2014-ம் ஆண்டு ஆய்வு செய்யப்பட்டு திட்டம் தயாரிக்கப்பட்டது.

இதன்படி, வாளையாறில் இருந்து பிச்சனூர், வேளந்தாவளம், திருமலையாலாம்பாளையம், குட்டிகவுண்டன்பதி, கல்லாபுரம், வடபுதூர், கிணத்துக்கடவு, சிக்கலாம்பாளையம், கிணத்துக்கடவு மின்வாரிய அலுவலகம் வழியாக திருமேணிநகர், கொண்டம்பட்டி, வடசித்தூர், பெரியகளந்தை வழியாக காட்டம்பட்டிக்கு குழாய் பதிக்கப்பட உள்ளது.

 இதில், 26 கிலோமீட்டர் தூரம் சாலையோரமும், மீதமுள்ள 13 கிலோ மீட்டர் தூரம் விவசாய நிலப்பகுதியிலும் குழாய் பதிக்கப்படுகிறது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

கருத்துக்கேட்பு கூட்டம்

இந்த நிலையில், விவசாயிகள் கருத்துக்கேட்பு கூட்டம்  கிணத்துக்கடவு தாசில்தார் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கோவை பீளமேட்டில் உள்ள கொச்சின், சேலம் எரிவாயு குழாய் பதிப்புதிட்ட சப்-கலெக்டர் ஷெர்லி (நிலம் எடுப்பு) கலந்து கொண்டார். இதில் கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். 

அவர்கள், எரிவாயு குழாய் குடியிருப்பு பகுதிக்குள் வருவதால் அதனை மாற்று வழியில் கொண்டு செல்ல வேண்டும் என்றனர். இதற்கிடையில் கல்லாபுரம், குருநெல்லிப்பாளையம் விவசாயிகள் அங்கு வந்தனர். பின்னர் விவசாயிகள் கூறுகையில், நாங்கள் ஏற்கனவே 51 கேள்விகள் அடங்கிய கடிதம் அனுப்பியுள்ளோம். 

அதற்கு பதில் தராமல் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்து முறையில்லை. எனவே இந்த கூட்டத்தை ஒத்து வைக்க வேண்டும். மேலும் விவசாய நிலங்களுக்குள் எரிவாயு குழாய் பதித்தால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே சாலையோரங்களில் குழாய் பதித்து கொண்டு செல்ல வேண்டும் என்று கூறினர்.

உரிய நடவடிக்கை

அப்போது, இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சப்-கலெக்டர் ஷெர்லி தெரிவித்தார். இந்த கூட்டத்தில் கிணத்துக்கடவு தாசில்தார் சசிரேகா, பாரத் பெட்ரோலிய செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், சர்வேயர் (நில எடுப்பு பிரிவு) இளங்கோவன், கிணத்துக்கடவு மண்டல தாசில்தார் ராமராஜ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
1 More update

Next Story