ஈரோட்டில் இருசக்கர வாகனங்கள் திருடிய 3 பேர் கைது- 8 வாகனங்கள் பறிமுதல்

ஈரோட்டில் இருசக்கர வாகனங்கள் திருடிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஈரோடு
ஈரோட்டில் இருசக்கர வாகனங்கள் திருடிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வாகன தணிக்கை
ஈரோடு டவுன் கிரைம் போலீசார் நேற்று முன்தினம் ஈரோடு மாநகர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 2 பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தியபோது முன்னுக்கு பின் முரணாக பேசினார்கள். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் முழு விவரங்களை கேட்டு விசாரித்தனர்.
விசாரணையில், அவர்கள் ஈரோடு வளையக்காரவீதி எல்லை மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த ராஜதுரையின் மகன் சூர்யபிரகாஷ் (வயது 28), மதுரை கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ரத்தினத்தின் மகன் விஜயகுமார் (28) ஆகியோர் என்பதும், அவர்கள் ஓட்டி வந்தது திருட்டு மோட்டார் சைக்கிள் என்பதும் தெரியவந்தது. மேலும், அவர்கள் பல இடங்களில் இருசக்கர வாகனங்களை திருடியதையும் ஒப்புக்கொண்டனர்.
கைது
அதன்பிறகு சூர்யபிரகாஷ், விஜயகுமார் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் தெரிவித்த தகவலின்பேரில், ஏற்கனவே திருடப்பட்ட ஒரு மொபட், 5 மோட்டார் சைக்கிள்கள் என மொத்தம் 6 வாகனங்களை போலீசார் மீட்டனர்.
இதேபோல் ஈரோடு சூரம்பட்டி போலீசார் நடத்திய வாகன சோதனையில், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபர் ஒருவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 19 வயது வாலிபா் என்பதும், அவர் ஓட்டி வந்தது திருட்டு மோட்டார் சைக்கிள் என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களை மீட்டனர்.
Related Tags :
Next Story






