புகார் பெட்டி

புகார் பெட்டி
தேங்கி நிற்கும் கழிவுநீர்
ஈரோடு சம்பத் நகர் மெயின் ரோட்டில் கொங்கு கலையரங்கம் பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக அந்த பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி அந்த பகுதியில் உள்ள தெருவிளக்குகளில் மின் விளக்குகளும் ஒளிரவில்லை. எனவே கழிவுநீரை அகற்றவும், மின் விளக்குகளை ஒளிரவைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சம்பத் நகர்.
ஆபத்தான கம்பி
ஈரோடு கரூா் பிரதான சாலையில் இருந்து சோலாா் செந்தூா் காா்டனுக்கு செல்லும் பாதையில் மின்கம்பம் உள்ளது. இதிலுள்ள தாங்கு கம்பி தார்சாலை அருகே தாழ்ந்தபடி செல்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மீது கம்பி பட்டு விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடனே தாங்கு கம்பியை அகற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், செந்தூா்காா்டன்.
வழியும் வாய்க்கால் தண்ணீர்
மொடக்குறிச்சி வட்டம் குளூர் ஊராட்சி பகுதியில் செங்கரைப்பாளையம்-மொடக்குறிச்சி மெயின் ரோடு உள்ளது. இந்த ரோட்டில் உள்ள வெள்ளிமலைப்பாறை அருகே கீழ்பவானி வாய்க்காலில் இருந்து தண்ணீர் வழிந்து ரோட்டில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் ரோடு பழுதடைந்துவிட்டது. இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறுகிறார்கள். எனவே வாய்க்கால் தண்ணீர் வெளியேறுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ்.கிருஷ்ணன், செங்கரைப்பாளையம்.
பயன்பாட்டுக்கு வருமா?
சிவகிரி பேரூராட்சிக்கு உள்பட்ட கவுண்டம்பாளையம் காலனி மதுரைவீரன் கோவிலுக்கு பின்புறம் ஆழ்துளை கிணறு ஒன்று உள்ளது. இந்த ஆழ்துளை கிணற்றை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் அதன் தானியங்கி குழாய் பழுதாகி விட்டது. இதனால் அந்த ஆழ்துளை கிணற்றை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. பழுதான ஆழ்துளை கிணற்றை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் அந்த பகுதி பொதுமக்களின் குடிநீர் தேவை பூர்த்தியாகும். எனவே அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சிவகிரி.
மின்விளக்கு ஒளிருமா?
பெருந்துறை அருகே உள்ள காஞ்சிக்கோவில் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக இந்த மின் விளக்கு ஒளிரவில்லை. இதனால் அந்த பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே மின் விளக்கு ஒளிர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், காஞ்சிக்கோவில்.
பாதையில் இடையூறு
ஈரோடு 54-வது வார்டு காளமேகம் வீதியில் ரோடு போடுவதற்காக பாதையில் ஜல்லிகள் கொண்டுவந்து கொட்டியுள்ளார்கள். ஆனால் எந்த பணியும் இன்னும் தொடங்கவில்லை. ஆனால் பாதையிலேயே ஜல்லிகள் குவித்து போடப்பட்டு இருப்பதால் இருசக்கர வாகனத்தில் வீதிக்குள் செல்ல முடியவில்லை. பாதையில் இடையூறாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரோடு போடும் பணியை விரைவில் தொடங்க வேண்டும். அல்லது ஜல்லிகளை அள்ளி ஓரமாக குவிக்க ஆவன செய்ய வேண்டும்.
பொதுமக்கள், ஈரோடு.
Related Tags :
Next Story






