கைதான 9 பேரும் கோவை கோர்ட்டில் காணொலி காட்சி மூலம் ஆஜர்


கைதான 9 பேரும் கோவை கோர்ட்டில் காணொலி காட்சி மூலம் ஆஜர்
x
தினத்தந்தி 29 Dec 2021 6:53 PM IST (Updated: 29 Dec 2021 6:53 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 9 பேரும் கோவை கோர்ட்டில் காணொலி காட்சி மூலம் ஆஜரானார்கள். விசாரணை வருகிற 12-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

கோவை

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 9 பேரும் கோவை கோர்ட்டில் காணொலி காட்சி மூலம் ஆஜரானார்கள். விசாரணை வருகிற 12-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 

பொள்ளாச்சி பாலியல் வழக்கு

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உள்பட இளம்பெண்களை ஏமாற்றி ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து வந்ததுடன், அதை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்தனர். இந்த கும்பலிடம் மாட்டிக்கொண்ட கல்லூரி மாணவி ஒருவர் கதறும் வீடியோ கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கோவை மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் அந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. அவர்கள் நடத்தி வழக்கில் தொடர்புடைய திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். 

சேலம் சிறையில் அடைப்பு

பின்னர் அந்த வழக்கு சி.பி.ஐ.-க்கு மாற்றப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி வழக்கில் தொடர்புடைய பொள்ளாச்சி நகர அ.தி.மு.க. மாணவரணி செயலாளராக இருந்த அருளானந்தம், ஹேரேன்பால், பாபு என்ற பைக்பாபு ஆகியோரை கைது செய்தனர். 

இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொள்ளாச்சி கிட்டசூரம்பாளையத்தை சேர்ந்த அருண்குமாரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். 

12-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

இந்த நிலையில் கோவை மகிளா கோர்ட்டில் நேற்று பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள 9 பேரும் சிறையில் இருந்தவாறே காணொலி காட்சி(வீடியோ கான்பரன்ஸ்) மூலம் நீதிபதி நந்தினி தேவி முன்பு ஆஜரானார்கள். பின்னர் விசாரணையை தொடங்கிய நீதிபதி, சாட்சிகளிடம் விசாரணை நடத்த இருப்பதால், அடுத்த மாதம்(ஜனவரி) 12-ந் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.

1 More update

Next Story