குப்பைக்கிடங்கான நீர்வழிப்பாதை


குப்பைக்கிடங்கான நீர்வழிப்பாதை
x
தினத்தந்தி 29 Dec 2021 6:53 PM IST (Updated: 29 Dec 2021 6:53 PM IST)
t-max-icont-min-icon

குப்பைக்கிடங்கான நீர்வழிப்பாதை


நாம் இப்போது குடிக்கும் நல்ல குடிநீர் வருங்கால சந்ததியினருக்கும் கிடைக்க வேண்டும் என்றால் நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும். அதற்கு நீர்நிலைகளை தூர்வாரி தண்ணீரை சேமித்து வைக்க வேண்டும். குளங்கள், ஏரிகள் மட்டுமல்ல நீர்வழிப்பாதைகளையும் முறையாக பராமரிக்க வேண்டும். இதற்காக நீதிமன்றங்கள் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்து உள்ளன. இருப்பினும் பல இடங்களில் நீர்நிலைகளும், நீர்வழிப்பாதைகளும் குப்பை கொட்டும் இடமாக மாறி உள்ளன. இதற்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். இப்படியே நீர்வழிப்பாதைகளை குப்பைகளை கொட்டி நிரப்பிவிட்டால், அவைகள் தூர்ந்து தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்படும். 

கோவை பகுதியில் அப்படி ஒரு நீர்வழிப்பாதை குப்பைகளால் நிரம்பி துர்நாற்றம் வீசி வருகிறது. அது பற்றிய விவரம் வருமாறு:-

சிங்காநல்லூர் குளம்

கோவை சிங்காநல்லூரில் 288 ஏக்கர் பரப்பளவில் குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தை நம்பி 396 வகை தாவரங்கள், 160 வகை பறவைகள், 62 வகை பட்டாம்பூச்சிகள், 22 வகை பாலூட்டிகள் உள்பட பல்வேறு உயிரினங்கள் வாழ்வதாக ஆவணப்படுத்தப்பட்டு இருக்கிறது. பல்லுயிர் பெருக்கத்தின் முன்மாதிரியாக திகழும் இந்த குளம், தமிழகத்தின் முதல் நகர்ப்புற பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடும் துர்நாற்றம்

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சிங்காநல்லூர் குளத்தில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் குளத்தின் தண்ணீர் மாசுபட்டு வருகிறது. குறிப்பாக சங்கனூர் ஓடையும், சிங்காநல்லூர் குளமும் இணையும் பகுதியில் உள்ள நீர்வழித்தடம் பிளாஸ்டிக் பொருட்கள் உள்பட கழிவுகள் நிறைந்து தண்ணீரே தெரியாத அளவுக்கு காணப்படுகிறது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. 
இதனால் அருகில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். மேலும் தண்ணீரில் நச்சுத்தன்மை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

10 ஆண்டுகளாக பிரச்சினை

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- கோவை கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட 73-வது வார்டு நஞ்சப்பா நகர் பகுதி உள்ளது. இங்கு சிங்காநல்லூர் குளமும், சங்கனூர் ஓடையும் இணையும் இடம் இருக்கிறது. இதில், ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை தொடங்கும்போது, கோவை மாநகரின் ஒட்டுமொத்த கழிவுகளும் வந்து சேர்ந்து விடுகிறது. மலைபோல் குவிந்து கிடப்பதால், நீரோட்டம் தடைபடுகிறது. 

இந்த பிரச்சினை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது.இதற்கு காரணம், அந்த இடத்தில் 2 ஆக பிரிக்கப்பட்டு சங்கனூர் ஓடையின் ஒரு பகுதி தண்ணீர் நொய்யல் ஆற்றிலும், மற்றொரு பகுதி தண்ணீர் சிங்காநல்லூர் குளத்திலும் கலக்கிறது. எனவே குளத்துக்கு ஓடை தண்ணீரை விடாமல், அதனருகில் செல்லும் சிமெண்டு கால்வாய் வழியாக நொய்யல் ஆற்றிலேயே விட வேண்டும். இதனால் குளம் மாசுபடுவது தடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

கழிவுகளை அகற்ற நடவடிக்கை

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், சங்கனூர் ஓடையில் தண்ணீர் அதிகமாக வரும் சமயங்களில், அதை 2 ஆக பிரித்து ஆற்றுக்கும், குளத்துக்கும் அனுப்ப வேண்டி உள்ளது. இதனால் சிங்காநல்லூர் குளத்துக்கு செல்லும் பாதையை அடைக்க முடியாது. அந்த நீர்வழித்தடத்தில் தேங்கி கிடக்கும் கழிவுகளை விரைந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

1 More update

Next Story