கைத்தறி ஆடைகள் கண்காட்சி


கைத்தறி ஆடைகள் கண்காட்சி
x
தினத்தந்தி 29 Dec 2021 6:54 PM IST (Updated: 29 Dec 2021 6:54 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் கைத்தறி ஆடைகள் கண்காட்சியை கலெக்டர் சமீரன் தொடங்கி வைத்தார்.

கோவை

கோவையில் கைத்தறி ஆடைகள் கண்காட்சியை கலெக்டர் சமீரன் தொடங்கி வைத்தார்.

கைத்தறி ஆடைகள் கண்காட்சி

மத்திய ஜவுளித்துறையின் கைத்தறி வளர்ச்சி ஆணையம் மற்றும் தமிழக கைத்தறி துறை ஆகியவை சார்பில் கைத்தறி ஆடைகள் விற்பனை கண்காட்சி, கோவை-அவினாசி சாலையில் உள்ள தனியார் அரங்கத்தில் நேற்று தொடங்கியது. இதனை மாவட்ட கலெக்டர் சமீரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து ஆடை வகைகள் குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.

அப்போது கைத்தறி நெசவாளர்களின் சமூக பொருளாதார நிலையை உயர்த்தவும், கைத்தறி ஆடைகள் விற்பனையை ஊக்குவிக்கவும் பொதுமக்கள் கைத்தறி ஆடைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மு.க.ஸ்டாலின் உருவம்

இதுகுறித்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை அதிகாரி கூறியதாவது:- கண்காட்சியில் கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள சுமார் 60 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் ஆடைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளது. இதில் 40 விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. 

சிறுமுகை நெசவாளர்களின் தேசிய விருது பெற்ற திருவள்ளுவர் மற்றும் திருக்குறள்கள் அச்சிடப்பட்ட சில்க் சேலையும்(6.20 மீட்டர்), மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் 7 உலக அதிசயங்கள் அச்சிடப்பட்ட சேலையும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதேபோன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவம் அச்சிடப்பட்ட சேலையும் பார்வையாளர்களை ஈர்த்தது.

அனுமதி இலவசம்

வருகிற 12-ந் தேதி வரை 15 நாட்களுக்கு காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி நடைபெறும். கண்காட்சியில் பல்வேறு ரக பட்டு சேலைகள், போர்வைகள், வேட்டிகள், துண்டுகள் ஆகியவை 30 சதவீதம் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு அனுமதி இலவசம். ரூ.60 லட்சம் வரை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

இதில் தமிழ்நாடு பஞ்சாலை கழக துணை இயக்குனர் ராஜேந்திரன், மத்திய ஜவுளித்துறை ஆணையர் சுப்ரமணியன், தேசிய கைத்தறி வளர்ச்சி கழக மேலாளர் ரத்தினவேல், கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குனர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story