தனியார் கல்லூரிக்குள் புகுந்த சிறுத்தைப்புலி

கோவைப்புதூரில் தனியார் கல்லூரிக்குள் சிறுத்தைப்புலி புகுந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
கோவை
கோவைப்புதூரில் தனியார் கல்லூரிக்குள் சிறுத்தைப்புலி புகுந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
கல்லூரிக்குள் புகுந்த சிறுத்தைப்புலி
கோவையை அடுத்த கோவைப்புதூர், வனப்பகுதிக்கு அருகில் உள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக சிறுத்தைப்புலி ஒன்று சுற்றித்திரிந்து வருகிறது. இதனை பிடிப்பதற்காக கூண்டு வைக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் அந்த கூண்டுக்குள் சிறுத்தைப்புலி சிக்காமல் வனத்துறையினருக்கு போக்கு காட்டி வருகிறது.
இந்தநிலையில் சமீபத்தில் அந்த சிறுத்தைப்புலி, அங்குள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி வளாகத்திற்குள் புகுந்ததாக தெரிகிறது. மேலும் அங்கு கட்டி வைக்கப்பட்டு இருந்த 2 நாய்களை கடித்து கொன்றதாக கூறப்படுகிறது. இது தவிர தரையில் ரத்தக்கறையுடன் சிறுத்தைப்புலியின் கால் தடங்கள் பதிவாகி இருந்தன.
வீடியோ வைரல்
இதற்கிடையில் அந்த கல்லூரி வளாகத்துக்குள் சிறுத்தைப்புலி செல்வது, அங்குள்ள படிக்கட்டுகளில் லாவகமாக இறங்குவது, காயப்போடப்பட்டு இருந்த துணிகளை முகர்ந்து பார்ப்பது போன்ற காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ காட்சி, தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
வெளியே வர வேண்டாம்
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, கோவைப்புதூர் பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தைப்புலியை பிடிக்க ஏற்கனவே கூண்டு வைக்கப்பட்டு உள்ளது. மேலும் 2 கூண்டுகள் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அது தனியார் கல்லூரிக்குள் புகுந்து நாய்களை கடித்து கொன்றது உண்மைதானா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
சிறுத்தைப்புலியின் நடமாட்டம் உள்ளதால், அது கூண்டில் சிக்கும் வரை பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story






