கோவை கலெக்டர் அலுவலகத்தை நர்சுகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

பணி நீட்டிப்பு செய்ய வலியுறுத்தி கோவை கலெக்டர் அலுவலகத்தை நர்சுகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை
பணி நீட்டிப்பு செய்ய வலியுறுத்தி கோவை கலெக்டர் அலுவலகத்தை நர்சுகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பணி நியமனம்
கோவை மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக மாவட்ட நிர்வாகம் சார்பில் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் 6 மாத காலத்திற்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நர்சுகள் உள்பட மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு மாதந்தோறும் ரூ.14 ஆயிரம் ஊதியமாக வழங்கப்பட்டது. இவர்களது பணிக்காலம் இந்த மாதம் முடிவடைய உள்ளது.
இதற்கிடையே பணி நீட்டிப்பு வழங்கக்கோரி நேற்று 50-க்கும் மேற்பட்ட நர்சுகள் கோவை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களிடம் ரேஸ்கோர்ஸ் இன்ஸ்பெக்டர் சுஜாதா தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து கலெக்டரை சந்தித்து மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.
ஒப்பந்த அடிப்படையில்...
இதுகுறித்து முற்றுகையில் ஈடுபட்ட நர்சுகள் கூறியதாவது:-
கொரோனா சமயத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நேர்காணல் நடத்தப்பட்டு, 6 மாத கால ஒப்பந்த அடிப்படையில் கடந்த ஆகஸ்டு மாதம் 69 பேர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் பணிக்கு சேர்ந்தோம். முதலில் உணவு, தங்கும் இடம் தரப்பட்டது. ஆனால் அடுத்த சில நாட்களில் உணவு வினியோகம் நிறுத்தப்பட்டது.
இதற்கிடையே கடந்தமாதத்தில் இருந்து எங்களை பணியில் இருந்து நின்று கொள்ளுமாறு குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பப்பட்டது. அப்போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் முறையிட்டதை தொடர்ந்து, மீண்டும் எங்களை பணிபுரிய அனுமதித்தனர். ஆனால் மீண்டும் இந்த மாதம் முடிவடைந்தவுடன், பணியில் இருந்து நின்று கொள்ளுமாறு எங்களுக்கு வாய்மொழியாக அறிவுறுத்தி உள்ளனர்.
பணி நீட்டிப்பு
கொரோனா காலங்களில் உயிரை பணயம் வைத்து நாங்கள் மருத்துவ சேவை ஆற்றி வந்தோம். கோவையில் தற்போது வரை தினமும் சுமார் 80 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் டெங்கு, ஒமைக்ரான் பரவலும் அச்சுறுத்தி வருகிறது. எனவே இவற்றை கருத்தில் கொண்டு எங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும்.
இதேபோல் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் முன்னுரிமை அளிப்பதாக எங்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் எங்களில் 8 பேருக்கு மட்டும் இந்த திட்டத்தில் பணி வழங்கப்பட்டு உள்ளது. மற்றவர்களுக்கு வேலை வழங்கவில்லை. எனவே ஏதாவது ஒரு திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் ஏதாவது ஒரு இடத்தில் பணிபுரிய எங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story






