புகார் பெட்டி

புகார் பெட்டி
வேகத்தடை அமைக்கப்படுமா?
கோவையை அடுத்த பாப்பம்பட்டி, பீடம்பள்ளி ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகளில் வாகனங்கள் வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதை தடுக்க அந்த பகுதிகளில் வேகத்தடைகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரஜினி செந்தில், பாப்பம்பட்டி.
சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்
கோவை பி.என்.புதூரில் வடவள்ளி செல்லும் சாலையில் கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் அங்கு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் வாகன விபத்துகள் அதிகரித்து வருகிறது. இது தவிர நடந்து செல்பவர்களும் கால்நடைகளால் அச்சப்படுகின்றனர். எனவே சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள் தொல்லையை கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராம், கோவை.
பயனற்ற அரசு கட்டிடம்
சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரிமலை பி.ஏ.பி. கால்வாய் அருகே உள்ள நிழற்குடை எதிரே பழுதடைந்த அரசு கட்டிடம் உள்ளது. பயன்படுத்தப்படாமல் கிடக்கும் அந்த கட்டிடத்தில் சமூக விரோத செயல்கள் அரங்கேறுகின்றன. இதனால் அந்த வழியாக செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே அந்த கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் அல்லது அங்கு அரங்கேறும் சமூக விரோத செயல்களை தடுக்க வேண்டும்.
பழனிசாமி, சுல்தான்பேட்டை.
புதர் சூழ்ந்த நீரோடை
கோத்தகிரி டானிங்டனில் விநாயகர் கோவில், எம்.ஜி.ஆர். சதுக்கம் வழியாக நீரோடை ஒன்று செல்கிறது. இந்த நீரோடையை புதர் செடிகள் சூழ்ந்து உள்ளன. இதன் காரணமாக மழைக்காலங்களில் நீரோட்டம் தடைபட்டு, அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்துவிடும் அபாயம் காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த நீரோடையை தூர்வார விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுப்பிரமணி, இடுக்கொரை.
தெருநாய்கள் தொல்லை
கோத்தகிரி நகரில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அவை நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் துரத்தி கடிக்க முயல்கின்றன. இதன் காரணமாக விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் பொதுமக்கள் அச்சத்துடன் நடந்து செல்வதை காண முடிகிறது. எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை முன்வர வேண்டும்.
புஷ்பராணி, கோத்தகிரி.
குண்டும், குழியுமான சாலை
சரவணம்பட்டி அருகே கரட்டுமேடு வி.கே.வி. நஞ்சப்பா நகரில் உள்ள சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழை பெய்யும் சமயத்தில் அதில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. அந்த தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது. எனவே அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ஜெயபிரகாஷ், கரட்டுமேடு.
சாக்கடை கால்வாய் வசதி
இருகூர் பேரூராட்சிக்கு உட்பட்ட தீபம் நகர் மற்றும் மாணிக்கம் நகரில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி கிடப்பதால், கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் முன்வர வேண்டும்.
லலிதா, இருகூர்.
ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
சிங்காநல்லூர் ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் வெள்ளலூர் செல்லும் வழியில் சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் அங்கு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் விபத்துகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சின்னதம்பி, கோவை.
போக்குவரத்து சிக்னல் வேண்டும்
கோவை புலியகுளம் விநாயகர் கோவில் பகுதி எப்போதும் போக்குவரத்து நெருக்கடியால் பரபரப்பாக காணப்படும். இது ராமநாதபுரம், சவுரிபாளையம், லட்சுமி மில் சிக்னல் உள்ளிட்ட இடங்களின் சந்திப்பு பகுதியாக உள்ளது. ஆனால் இங்கு போக்குவரத்து சிக்னல் இல்லாததால் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர். இதன் காரணமாக விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இங்கு சிக்னல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிருஷ்ணா, புலியகுளம்.
வழிகாட்டாத வழிகாட்டி பலகை
கோவை சாய்பாபா காலனி மேட்டுப்பாளையம் சாலையில் இருந்து பாரதி பூங்கா செல்லும் சாலை சந்திப்பு பகுதியில் மீனாட்சி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்வதற்காக வழிகாட்டி பலகை ஒன்று வைக்கப்பட்டு இருந்தது. கடந்த சில நாட்களாக அந்த வழிகாட்டி பலகை உடைந்து கீழே தொங்கி கொண்டு இருக்கிறது. பொதுமக்களுக்கு வழியை காட்டிய வழிகாட்டி பலகை தற்போது வழிகாட்ட முடியாத நிலையில் உள்ளது. இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
குமரன், சாய்பாபா காலனி.
கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?
கூடலூரில் இருந்து பந்தலூருக்கு குறைந்த எண்ணிக்கையிலான பஸ்களே இயக்கப்படுகிறது. இதனால் சுற்றுவட்டார கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக மதிய வேளையில் பஸ்கள் இல்லாததால் கூடலூர் பஸ் நிலையத்தில் நீண்ட நேரம் பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே கூடலூரில் இருந்து பந்தலூருக்கு கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனந்த், முன்டக்குன்னு.
Related Tags :
Next Story






