ஆனைமலை பகுதியில் வேகத்தடையில் சுண்ணாம்புக்கு பதிலாக வெள்ளை பெயிண்ட் அடிக்க வேண்டும்


ஆனைமலை பகுதியில் வேகத்தடையில் சுண்ணாம்புக்கு பதிலாக வெள்ளை பெயிண்ட் அடிக்க வேண்டும்
x
தினத்தந்தி 30 Dec 2021 10:34 PM IST (Updated: 30 Dec 2021 10:34 PM IST)
t-max-icont-min-icon

ஆனைமலை பகுதியில் வேகத்தடையில் சுண்ணாம்புக்கு பதிலாக வெள்ளை பெயிண்ட் அடிக்க வேண்டும்

பொள்ளாச்சி

ஆனைமலை பகுதியில் வேகத்தடையில் சுண்ணாம்புக்கு பதிலாக வெள்ளை நிற பெயிண்ட் அடிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வேகத்தடை

விபத்துகளை தடுக்கவும், போக்குவரத்து நெருக்கடியை குறைக்க சாலைகள் அகலப்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் விபத்துகள் ஏற்படும் முக்கிய சந்திப்புகள், பள்ளிகள், ஆஸ்பத்திரிகள் உள்ள பகுதிகளில் வேகத்தடை அமைக்கப்படுகிறது. மேலும் வேகத்தடை இருப்பதை வாகன ஓட்டிகள் தெரிந்து கொள்வதற்கு வெள்ளை நிறத்தில் பெயிண்ட் அடிக்கப்படுகிறது.

இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பெயிண்டிற்கு பதிலாக சுண்ணாம்பு பவுடரை நீரில் கலந்து அடிக்கின்றனர். வாகனங்கள் தொடர்ந்து செல்வதால் வேகத்தடை மீது போடப்பட்ட கோடு எளிதில் அழிந்து விடுகிறது. இதனால் மீண்டும் அந்த பகுதிகளில் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

சுண்ணாம்பு பவுடர் அடிப்பு

ஆனைமலை முக்கோணம், அய்யாமடை பிரிவு, கோட்டூர், ஆழியாறு பகுதிகளில் வேகத்தடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் பெயிண்ட் இல்லாததால் வேகத்தடை இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி கொள்கின்றனர். இதன் காரணமாக வேகத்தடை மீது பெயிண்ட் அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். 

ஆனால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வெள்ளை நிற பெயிண்ட் அடிக்காமல், சுண்ணாம்பு பவுடரை கலந்து அடித்து வருகின்றனர்.
இதனால் வேகத்தடை மீது அடிக்கப்பட்ட கோடு விரைவில் அழிந்து விடுகிறது. பெயரளவிற்கு நடைபெறும் பணிகளால்  மீண்டும் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

எனவே அதிகாரிகள் சுண்ணாம்பு பவுடருக்கு பதிலாக பெயிண்ட் அடிக்க வேண்டும். மேலும் வேகத்தடை குறித்த அறிவிப்பு பலகை வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
1 More update

Next Story