எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் திடீர் சாலை மறியல்

எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் திடீர் சாலை மறியல்
கிணத்துக்கடவு
வாளையாறு-காட்டம்பட்டி இடையே விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் கருத்துக்கேட்பு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள காட்டம்பட்டியில் 39 ஏக்கரில் எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் எரிவாயு சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட உள்ளது. இதற்காக கேரள மாநிலம் வாளையாரில் இருந்து காட்டம்பட்டி வரை 39 கிலோ மீட்டர் எரிவாயு குழாய் பதிக்கப்பட உள்ளது.
இதில் 26 கிலோ மீட்டர் தூரம் சாலையோரத்திலும், மீதமுள்ள 13 கிலோ மீட்டர் தூரம் விவசாய நிலங்களிலும் குழாய் பதிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக அரசு அதிகாரிகளுக்கு 51 கேள்விகள் அடங்கிய மனுவை அனுப்பியுள்ளனர். இந்த கேள்விகளுக்கு அதிகாரிகள் உரிய பதில் அளித்தால் மட்டுமே எரிவாயு குழாய் பதிப்பது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொள்வோம் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்கேட்பு கூட்டம்
இந்த நிலையில் கிணத்துக்கடவு தாசில்தார் அலுவலகத்தில் சப்-கலெக்டர் ஷெர்லி ஏஞ்சலா (நிலம் எடுப்பு) தலைமையில் குருநெல்லிபாளையம், குதிரையாலாம்பாளையம் பகுதியை சேர்ந்த 13 விவசாயிகளுக்கு கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடைபெறுவதாக கடிதம் அனுப்பப்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து விவசாயிகள் நேற்று காலை தாசில்தார் அலுவலத்திற்கு வந்தனர். ஆனால் அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதையடுத்து அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, கருத்துக்கேட்பு கூட்டம் பிற்பகல் 3 மணிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
தொடர்ந்து விவசாயிகள் அங்கு காத்திருந்தனர். அப்போது மதியம் அங்கு வந்த சப்-கலெக்டர் ஷெர்லி ஏஞ்சலாவிடம், விவசாயிகள் கருத்துக்கேட்பு கூட்டத்தை தள்ளி வைத்தது குறித்து கேட்டனர். அதற்கு அலுவலக பணியின் காரணமாக தள்ளி வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
திடீர் சாலைமறியல்
இதனை ஏற்றுக்கொள்ளாத விவசாயிகள் அதிகாரிகளின் மெத்தனபோக்கை கண்டித்து, விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் தாலுகா அலுவலகம் முன்பு கோவை-பொள்ளாச்சி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த சப்-கலெக்டர் ஷெர்லி ஏஞ்சலா, கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் அருள்பிரகாஷ், சந்திரன் மற்றும் போலீசார் விவசாயிகளுடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் அடைந்த விவசாயிகள் கருத்துக்கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஒத்தி வைப்பு
கருத்துக்கேட்பு கூட்டத்தில், எங்கள் சந்தேகம் குறித்து 51 கேள்விகள் அதிகாரிகளிடம் வழங்கியுள்ளோம். அந்த கேள்விகளுக்கு பதில் தந்தவுடன், விவசாயிகளுடன் முழுமையாக ஆலோசனை செய்த பின்னரே கருத்துக்கேட்பு கூட்டம் நடந்த வேண்டும். அதுவரை கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து சப்-கலெக்டர் கூறுகையில், விவசாயிகளின் கோரிக்கை ஏற்று மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் கருத்துக்கேட்பு கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது. கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story






