தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி
நீரோடையில் கொட்டப்படும் கழிவுகள்
குன்னூர் அருகே அருவங்காடு எம்.ஜி.காலனி குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு குடியிருப்பு பகுதியில் நீரோடை செல்கிறது. இந்த நீரோடைக்கு அருகே குடிநீர் கிணறும் உள்ளது. இந்த நிலையில் இந்த நீரோடையில் குப்பைகள், கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அருகில் உள்ள கிணற்றில் இருக்கும் தண்ணீர் மாசு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த ஓடையில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.
கணேசன், அருவங்காடு.
பராமரிப்பு இல்லாத கிணறு
பந்தலூர் பஜாரில் உள்ள வருவாய் ஆய்வாளர் அருவலகம் அருகே ஒரு கிணறு உள்ளது. இந்த கிணற்றில் இருந்து குழாய் மூலம் பந்தலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த கிணற்றை சுற்றிலும் சுகாதாரமின்றி காணப்படுகிறது. மேலும் செடிகள் வளர்ந்து மரம் போன்று காணப்படுவதால் அதன் இலைகள் கிணற்றுக்குள் விழுவதால் குடிநீர் மாசு ஏற்பட்டு வருகிறது. எனவே பராமரிப்பு இல்லாத இந்த கிணற்றை அதிகாரிகள் சரிசெய்து, அதை சுற்றி இருக்கும் செடிகளை அகற்ற வேண்டும்.
குமார், பந்தலூர்.
ஒளிராத மின்விளக்குகள்
கோவை பீளமேட்டில் இருந்து காந்திமாநகர் செல்லும் சாலையில் மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தில் உள்ள மின்விளக்குகளில் பெரும்பாலானவை ஒளிரவில்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் விபத்து ஏற்படும் அபாயம் நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, பழுதடைந்த மின்விளக்குகளை சரிசெய்து மீண்டும் ஒளிர செய்ய வேண்டும்.
சந்திரன், பீளமேடு.
நோய் பரவும் அபாயம்
கோவை அருகே கோவைப்புதூர் அண்ணா நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதி முறையாக பராமரிப்பின்றி கிடக்கிறது. ஆங்காங்கே குப்பைகள் குவிந்தும், கழிவுநீர் வழிந்தோடியும் காணப்படுகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே அங்கு முறையாக பராமரிப்பு பணி மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறையினர் முன்வர வேண்டும்.
சுருதி, கோவைப்புதூர்.
ஆபத்தான மின்கம்பம்
கோவை விளாங்குறிச்சி கூட்டுறவு நகரில் உள்ள மின்கம்பம் ஒன்று எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழும் வகையில் நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே விபத்தை ஏற்படுத்தும் முன்பு ஆபத்தான நிலையில் இருக்கும் அந்த மின்கம்பத்தை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிருஷ்ணமூர்த்தி, விளாங்குறிச்சி.
புதர்மண்டி கிடக்கும் பூங்கா
கோவை மாநகராட்சி 26-வது வார்டு வெள்ளக்கிணறு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள சிறுவர் பூங்கா புதர் மண்டி கிடக்கிறது. மேலும் அங்குள்ள விளையாட்டு உபகரணங்கள் உடைந்து கிடக்கின்றன. இதனால் சிறுவர் அந்த பூங்காவை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே பூங்காவை முறையாக பராமரிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.
மணிமாறன், வெள்ளக்கிணறு.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
கோவை ஆர்.எஸ்.புரம் தடாகம் சாலையில் உள்ள திருமூர்த்தி லே-அவுட் பகுதியில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளதுடன், கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் டெங்கு உள்பட நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அய்யாசாமி, ஆர்.எஸ்.புரம்.
தினத்தந்தி செய்தி எதிரொலி:
பழுதான கட்டிடம் அகற்றம்
கோவை கவுண்டம்பாளையத்தில் இருந்து இடையர்பாளையம் செல்லும் வழியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஒரு கட்டிடம் பழுதடைந்து இருந்தது. இது தொடர்பாக தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக கட்டிடம் இடித்து அகற்றப் பட்டது. பொதுமக்கள் நலன்கருதி செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி. .
முருகேசன், கவுண்டம்பாளையம்.
குண்டும் குழியுமான சாலை
கோத்தகிரி ராம்சந்த் சதுக்கத்தில் இருந்து கிளை நூலகத்திற்கு செல்லும் சாலையில் ஒரு சில இடங்களில் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. எனவே இவ்வழியாக நடந்து செல்வோரும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே சாலையைப் புதுப்பிக்கா விட்டாலும், உடனடியாக பராமரிப்புப் பணியை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குருசாமி, கோத்தகிரி
ஆழியாறில் சுகாதாரக்கேடு
பொள்ளாச்சி அருகே ஆழியாறில் அணை, குரங்கு நீர்வீழ்ச்சி, மிகப்பெரிய பூங்கா, வண்ணமீன் பண்ணை உள்ளது. இவைகளை சுற்றி பார்க்க தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வெளியூர்களில் இருந்து வந்து செல்கின்றனர். இவ்வாறு, வரும்பயணிகள் பலர் தாங்கள் கொண்டுவந்த உணவு பொருட்களை சாப்பிட்டு விட்டு அதன் இலை மற்றும் பிளாஸ்டிக் கவர்களைஆங்காங்கே வீசி எறிந்து செல்கின்றனர். சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே அதை தடுக்க வேண்டும்.
பாலமுருகன், பொள்ளாச்சி.
Related Tags :
Next Story






