நுண்ணீர் பாசனம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு

நுண்ணீர் பாசனம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை ஒன்றியம் மலைப்பாளையத்தில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன திட்டம் குறித்து பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதற்கு அட்மா தலைவர் வி.மந்திராசலம் தலைமை தாங்கினார். முன்னோடி விவசாயி எம்.கே.முத்துமாணிக்கம் முன்னிலை வகித்தார். அட்மா உதவி தொழில்நுட்ப மேலாளர் ஜெயப்பிரகாஷ் வரவேற்றார்.
நிகழ்ச்சியில், துணை வேளாண்மை அலுவலர் சந்தியாகு இருதய ராஜ், முன்னாள் வேளாண் அதிகாரி தமிழ்செல்வன் ஆகியோர் பேசுகையில், நுண்ணீர் பாசனத்தால் 70 சதவிகிதம் தண்ணீர் சேமிப்பதோடு, விளைநிலத்தில் களைகளும் கடுப்படுத்தப்படுகிறது.
சாதாரணமாக ஒரு ஏக்கர் தண்ணீர் பாய்ச்சுவதை, நுண்ணீர் பாசனம் மூலம் 5 ஏக்கருக்கு பாய்த்து நீர் சேமிக்கப்படுகிறது. மேலும், உர செலவு குறைவு, விவசாயிகளுக்கு வேலை ஆட்கள் தேவைகுறைவு, சொட்டு நீர்பாசன வழி மூலம் உரம் இடுவதால் மகசூல் அதிகரிக்கும் என்று கூறினர்.
இதனைத்தொடர்ந்து விதை சான்று அலுவலர் நாகசுப்பிரமணியம் விதை சான்று அளிப்புதுறையின் திட்டங்கள் குறித்தும், முருகேசன் மீன்வளத்துறையின் திட்டங்கள் குறித்தும் பேசினர்.
இந்த பயிற்சியில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். முன்னதாக பயிற்சியில் வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு விதை நேர்த்தி செய்வது குறித்து விளக்கினர். முகாமில், உதவி வேளாண்மை அலுவலர் பாக்யராஜ், அட்மா உதவி தொழில்நுட்ப மேலாளர் குப்புத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story






