சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் - விழுப்புரம் கலெக்டர் அதிரடி நடவடிக்கை
மாடுகளை அதன் உரிமையாளர்கள் அபராதம் செலுத்திப் பெறாவிட்டால் அவை ஏலத்தில் விடப்படும் என விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் எச்சரித்துள்ளார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனை கவனத்தில் எடுத்துக் கொண்ட நகராட்சி நிர்வாகம் சாலைகளில் மாடுகளை திரிய விட்டால் அவற்றை பறிமுதல் செய்வதோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதனை மீறி சிலர் தொடர்ந்து மாடுகளை சாலைகளில் திரிய விடுவதாக புகார்கள் எழுந்த நிலையில், சாலைகளில் சுற்றித் திரிந்த 49 மாடுகளைப் பிடித்து நகராட்சி பூங்காவில் அடைத்தது விழுப்புரம் நகராட்சி நிர்வாகம். இந்த மாடுகளை அதன் உரிமையாளர்கள் அபராதம் கட்டி அழைத்துச் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டது. எனினும், ஏற்கனவே ஏழ்மையில் இருக்கும் தங்களுக்கு அதிக அளவில் அபராதம் விதிக்கப்படுவதாக மாடு வளர்ப்பவர்கள் கவலை தெரிவித்தனர்.
இவர்களது கோரிக்கையை ஏற்று 500 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டு மாடுகள் ஒப்படைக்கப்பட்டன. எனினும், மீண்டும் மாடுகளை சாலைகளில் மாடுகளை திரிய விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நகராட்சி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையை விழுப்புரம் மாவட்ட மக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.
இந்த நடவடிக்கை தொடரும் எனவும், நகராட்சி பூங்காவில் உள்ள மாடுகளை அதன் உரிமையாளர்கள் அபராதம் செலுத்திப் பெறாவிட்டால் அவை ஏலத்தில் விடப்படும் எனவும் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் எச்சரித்துள்ளார். பொதுமக்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story