15 வயதுக்கு மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு பள்ளி, கல்லூரிகளில் நாளை முதல் தடுப்பூசி


15 வயதுக்கு மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு பள்ளி, கல்லூரிகளில் நாளை முதல் தடுப்பூசி
x
தினத்தந்தி 2 Jan 2022 2:55 AM IST (Updated: 2 Jan 2022 2:55 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. பள்ளி, கல்லூரி வளாகத்திலேயே அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த கர்நாடக அரசு ஏற்பாடு செய்து உள்ளது.

பெங்களூரு: கர்நாடகத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.  பள்ளி, கல்லூரி வளாகத்திலேயே அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த கர்நாடக அரசு ஏற்பாடு செய்து உள்ளது. 

ஆலோசனை

நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக 15 முதல் 18 வயது வரையிலான சிறுவர்களுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.அதுபோல், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கும் மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. 

இதையடுத்து, கர்நாடகத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட இருக்கிறது. இதுதொடர்பாக பெங்களூரு விதானசவுதாவில் நேற்று அரசு அதிகாரிகளுடன், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் ரவிக்குமார், மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை வெற்றிகரமாக தொடங்கி முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார். பின்னர் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சிறுவர்களுக்கு நாளை தடுப்பூசி

மத்திய அரசின் உத்தரவின் பேரில் வருகிற 3-ந்தேதி முதல் (அதாவது நாளை) 15 முதல் 18 வயது சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி ஆரம்பம் ஆக உள்ளது. 60 வயது மேற்பட்டவர்கள் மற்றும் முன்கள பணியாளர்களும் பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது.

சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்குவதால், அதிகாரிகள், மாவட்ட பொறுப்பு மந்திரிகள், முன்கள பணியாளர்கள் இந்த தடுப்பூசி போடும் பணியில் கலந்துகொள்ள வேணடும் என்று உத்தரவிட்டுள்ளேன். மாவட்ட கலெக்டர்கள், நான் உள்பட மக்கள் பிரதிநிதிகளும், பிற அமைப்புகள், தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.

அரசு தயார்

சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை வெற்றிகரமாக தொடங்கி முடிக்கும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். பிறந்திருக்கும் 2022-ம் ஆண்டு மிகவும் சவால் நிறைந்ததாக இருக்கும். பொருளாதாரம் மற்றும் ஆட்சி நிர்வாகமும் சவால் நிறைந்ததாக இருக்கும். கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள அரசு தயாராக இருக்கிறது. கொரோனா பரவலை தடுக்க மாநிலம் முழுவதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா பரவலை தடுக்க தேவையான அனைத்து முன்எச்சரிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. அதற்காக சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி மாநிலத்தில் தொடங்க உள்ளது. மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடுவதற்கு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவலை தடுக்க அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை ஒவ்வொரு மக்களும் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

சகித்து கொள்ள மாட்டேன்

முன்னதாக அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தின் போது, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசும் போது, உங்களது பணியில் அரசு எந்த விதமான தலையீடும் செய்யாது. அரசின் திட்டங்களை ஒவ்வொரு பகுதிகளிலும் மக்களிடம் செல்லும்படியாக செயல்படுத்தவேண்டும். அரசின் திட்டங்களால் மக்கள் பயன் அடைய அதிகாரிகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும். அரசு அறிவிக்கும் திட்டங்களை சரியாக அமல்படுத்துவது அதிகாரிகளின் கடமையாகும்.

உங்களுடன் நான் எப்போதும் இருப்பேன். உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க எனது தலைமையிலான அரசு தயாராகவும் இருக்கிறது, நான் எதிர்பார்ப்பதை விட நீங்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும். யாருடைய அழுத்தத்திற்கும் அடிபணியாமல் உங்களது பணியை, நீங்கள் சுதந்திரமாக செய்யுங்கள். நீங்கள் திறமையாக பணியாற்றவில்லை எனில், அதனை நான் சகித்து கொள்ள மாட்டேன் என்றார்.

விண்ணப்பிக்கும் பணி தொடக்கம்

இதற்கிடையில், நாளை முதல் சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படுவதால், இதற்காக தடுப்பூசி போடுபவர்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி புத்தாண்டான நேற்றே விண்ணப்பிக்கும் பணி தொடங்கப்பட்டது. கர்நாடகத்தில் 2007-ம் ஆண்டு, அதற்கு முன்பாக பிறந்தவர்களுக்கு தடுப்பூசி போடப்படும்.

15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு செல்போன் எண் இருந்தால், அதன்மூலம் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டார்கள். செல்போன் எண் மூலமாக பதிவு செய்து தடுப்பூசி போட்டு கொள்ளலாம். செல்போன் எண் இல்லாதவர்கள், ஆதார் கார்டு அல்லது பள்ளி, கல்லூரிகளில் வழங்கப்படும் அடையாள அட்டையை காட்டி பதிவு செய்து கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

பெற்றோரின் அனுமதி கட்டாயம்

சிறுவர்கள் வேறு ஏதாவது தடுப்பூசி போட்டு இருந்தால், 15 நாட்களுக்கு பின்பு கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளலாம். அதுபோல, ஏதேனும் நோய் காரணமாக அவதிப்பட்டால், அந்த சிறுவர்கள் டாக்டரின் அனுமதி கடிதம் இருந்தால் மட்டுமே தடுப்பூசி போட அனுமதிக்கப்படுவார்கள்.

Next Story