என்ஜினீயர்-குடும்பத்தினரை மிரட்டி ரூ.44 லட்சம் நகை-பணம் கொள்ளை
பெங்களூருவில் தனியார் நிறுவன என்ஜினீயர்-குடும்பத்தினரை மிரட்டி ரூ.44 லட்சம் நகை-பணத்தை போலீஸ் போல் நடித்து மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
பெங்களூரு: பெங்களூருவில் தனியார் நிறுவன என்ஜினீயர்-குடும்பத்தினரை மிரட்டி ரூ.44 லட்சம் நகை-பணத்தை போலீஸ் போல் நடித்து மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
ரூ.44 லட்சம் நகை-பணம்
பெங்களூரு மகாலட்சுமி லே-அவுட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மகாலட்சுமிபுரம் பகுதியில் வசித்து வருபவர் சாம்ப நாயக். இவர் தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் சாம்ப நாயக், அவரது மனைவி வீட்டில் இருந்தனர். அப்போது வீட்டிற்கு வந்த 5 பேர் தங்களை திப்தூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர்கள் என்று கூறினர்.
பின்னர் சாம்ப நாயக்கிடம் உங்கள் மருமகன் எங்களிடம் இருந்து வாங்கி வந்த நகை, பணம், துப்பாக்கியை கொடுங்கள் என்று கூறினர். ஆனால் சாம்ப நாயக் தன்னிடம் மருமகன் எதுவும் தரவில்லை என்று தொிவித்தார். இதன்பின்னர் சாம்ப நாயக்கின் செல்போனை பறித்த 5 பேரும் சேர்ந்து அவரது மகன் மனோகருக்கு தொடர்புகொண்டு பேசி அவரை வீட்டிற்கு வரவழைத்தனர். பின்னர் சாம்ப நாயக், அவரது மனைவி, மகன் மனோகர் ஆகியோர் கை, கால்களை 5 பேரும் சேர்ந்து கட்டி போட்டனர். இதன்பின்னர் வீட்டின் பீரோவில் இருந்த ரூ.19 லட்சம் ரொக்கம், ரூ.25 லட்சம் மதிப்பிலான 500 கிராம் தங்கநகைகளை 5 பேரும் எடுத்து கொண்டனர்.
வலைவீச்சு
இதன்பின்னர் சாம்ப நாயக்கின் காரில் சாம்ப நாயக், மனோகரை 5 பேரும் ஏற்றினர். கோரகுண்டேபாளையா அருகே பெல் சர்க்கிள் எம்.எஸ்.பாளையா பகுதியில் சென்ற போது சாம்ப நாயக்கிடம் ரூ.20 லட்சம் கொடுத்தால் உங்களை விடுவிப்போம் என்று கூறினர். ஆனால் தங்களிடம் பணம் இல்லை என்று சாம்ப நாயக்கும், மனோகரும் கூறினர்.
பின்னர் காரில் இருந்து இறங்கிய 5 பேரும் ஆட்டோவில் தப்பி சென்றனர். இதன்பின்னர் கங்கமனகுடிக்கு சேர்ந்த 5 பேரும் சேர்ந்து சாம்ப நாயக்கின் மருமகனை மிரட்டி தாக்கியதுடன் உங்கள் மாமனார் வீட்டில் கொள்ளையடித்தது பற்றி யாரிடமும் சொல்ல கூடாது என்று கூறினர்.
அவ்வாறு கூறினால் கொலை செய்வதாகவும் மிரட்டினர். இதுபற்றி சாம்ப நாயக்கிடம், மருமகன் கூறி இருந்தார். பின்னர் நடந்த சம்பவங்கள் குறித்து மகாலட்சுமி லே-அவுட் போலீஸ் நிலையத்தில் சாம்ப நாயக் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story