செம்பரம்பாக்கம் ஏரி மீண்டும் முழு கொள்ளளவை எட்டுகிறது; பொதுப்பணித்துறை கண்காணிப்பு
செம்பரம்பாக்கம் ஏரி மீண்டும் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருப்பதால் பொதுப்பணித்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது. பூண்டி ஏரிக்கு வரும் 1,117 கனஅடி நீர் முழுவதும் திறந்து விடப்பட்டு வருகிறது.
ஏரிகளில் நீர் இருப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் பெய்த தொடர் மழையால் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.
அதன்படி பூண்டி ஏரியில் 3 ஆயிரத்து 118 மில்லியன் கன அடியும், சோழவரம் ஏரியில் 874 மில்லியன் கன அடியும், புழல் ஏரியில் 3 ஆயிரத்து 182 மில்லியன் கன அடியும், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரியில் 500 மில்லியன் கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் 3 ஆயிரத்து 465 மில்லியன் கனஅடியும் நீர் இருப்பு உள்ளது. இதுதவிர வீராணம் ஏரியில் 1,027 மில்லியன் கன அடியும் நீர் இருப்பு இருந்து வருகிறது.
பூண்டி ஏரி
பூண்டி ஏரியில் 96.50 சதவீதமும், சோழவரம் ஏரியில் 80.85 சதவீதமும், புழல் ஏரியில் 96.42 சதவீதமும், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரியில் 100 சதவீதமும், செம்பரம்பாக்கம் ஏரியில் 95.06 சதவீதமும், வீராணம் ஏரியில் 92.01 சதவீதமும் நீர் இருப்பு உள்ளது. சராசரியாக அனைத்து ஏரிகளிலும் 92.01 சதவீதம் இருப்பு உள்ளது.
அனைத்து ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13 ஆயிரத்து 222 மில்லியன் கன அடியில் (13.22 டி.எம்.சி.), தற்போது 12 ஆயிரத்து 166 மில்லியன் கன அடி (10.44 டி.எம்.சி.) நீர் இருப்பு உள்ளது. அதேபோல், பூண்டி ஏரிக்கு வரும் 1,117 கன அடி நீர் முழுமையாக திறக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
மீண்டும் முழு கொள்ளளவு
பருவ மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி கடந்த 2015 மற்றும் 2020-ம் ஆண்டு நிரம்பியது. அதன்பிறகு தற்போது மீண்டும் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. 24 அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 23.32 அடி நீர் இருப்பு உள்ளது.
எந்தவொரு நீர் நிலையிலும் அதன் கொள்ளளவைவிட இரண்டு அடி குறைவாக நீர் தேக்கி வைக்க வேண்டும் என வெள்ள மேலாண்மை குறித்த அரசு விதிகள் கூறுகின்றன. ஆனால், செம்பரம்பாக்கத்தில் இந்த ஆண்டு 23.50 அடி வரை நீரை சேமிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
அச்சப்பட தேவையில்லை
தற்போதைய நிலையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு 700 கன அடி வீதம் நீர்வந்து கொண்டிருக்கிறது. இதில் 500 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டு வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டிவிடாமல் இருப்பதற்காக சராசரியாக 23.32 அடி இருக்கும் வகையில் ஏரியின் நீர் மட்டம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக செம்பரம்பாக்கம் ஏரி 24 மணிநேரமும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு பொதுப்பணித்துறையின் முழு கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
ஏரிக்கு வரும் நீர் வரத்துக்கு ஏற்ப ஏரியில் இருந்து நீர் திறக்கப்படுவதால் தற்போதைய இருப்பு காரணமாக பொதுமக்கள் அச்சப்படதேவையில்லை.
இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.
சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு பிறகு செம்பரம்பாக்கம் என்ற பெயரை கேட்டாலே சென்னை புறநகர் பகுதிகளான சிறுகளத்தூர், திருநீர்மலை, காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம் மற்றும் அடையாறு ஆற்றங்கரையோரம் வசிப்பவர்களுக்கு அச்சம் இருந்து வருகிறது. அவ்வப்போது பெய்து வரும் மழையால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் எவ்வளவு? என உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story