வீட்டுக்கடனை செலுத்தாததால் வங்கி ஊழியர்கள் நெருக்கடி: எல்.ஐ.சி. முகவர் தீக்குளித்து தற்கொலை
மதுராந்தகத்தில் வீட்டுக்கடன் தவணையை செலுத்த வங்கி ஊழியர்கள் வற்புறுத்தியதால் மனமுடைந்த எல்.ஐ.சி. முகவர் தீக்குளித்து தற்கொலை செய்தார்.
எல்.ஐ.சி.முகவர்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சித்தாமூர் அருகே உள்ள பெரிய கயப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 54). இவர் மதுராந்தகத்தில் எல்.ஐ.சி.பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்தில் முகவராக இருந்து வந்தார். இவர், தன்னுடைய ஊரில் வீடு கட்டுவதற்காக தனியார் வங்கி ஒன்றில் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா காலக்கட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக வங்கியில் வாங்கிய வீட்டுக்கடன் தவணையை மோகனால் சரிவர செலுத்த முடியவில்லை என்று தெரிகிறது. இதனால் வங்கி ஊழியர்கள் மோகனை தொடர்பு கொண்டு கடனை செலுத்தும்படி கடும் நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.
தீக்குளித்து தற்கொலை
மேலும் கடனை கட்டத் தவறினால் மோகன் வீட்டை ஜப்தி செய்யப் போவதாகவும் மிரட்டியுள்ளதாக தெரிகிறது. இதனால் கடும் மன உளைச்சலில் இருந்து வந்த மோகன், நேற்று முன்தினம் பொறையூர் அருகே உள்ள காலி இடத்திற்கு சென்று தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அறிந்த சித்தாமூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கருகி கிடந்த மோகனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக மோகனின் தந்தை அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கடனை செலுத்த முடியாமல் தனியார் வங்கி அளித்த நெருக்கடியால் எல்.ஐ.சி. முகவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story