கைத்துப்பாக்கியுடன் வந்த கேரள காங்கிரஸ் பிரமுகர் கைது
கைத்துப்பாக்கியுடன் வந்த கேரள காங்கிரஸ் பிரமுகர் கைது
கோவை
காங்கிரஸ் பிரமுகர்
பாலக்காடு மாவட்டம் பட்டாம்பியை சேர்ந்தவர் கே.எஸ்.பி.ஏ. தங்கல் (வயது 60). காங்கிரஸ் பிரமுகர். இவர் பட்டாம்பி நகராட்சி முன்னாள்தலைவராக பதவி வகித்து வந்தவர். தற்போது மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார். இவர் பட்டாம்பியில் தனியார் பள்ளி நடத்தி வருகிறார்.
கைத்துப்பாக்கி,தோட்டாக்கள்
தங்கல் நேற்று காலை 6.30 மணிக்கு பெங்களூரு செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்தார்.விமான நிலையத்தில் அவரது சூட்கேசை ஸ்கேன் செய்து பார்த்தபோது அதில் கைத்துப்பாக்கியும், 7 தோட்டாக்களும் இருந்தன. துப்பாக்கி துருப்பிடித்த நிலையில் இருந்தது. இதையடுத்து அவர் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரிடம் (சி.ஐ.எஸ்.எப்) ஒப்படைக்கப்பட்டார்.
பின்னர் கோவை பீளமேடு போலீசில் தங்கலையும், துப்பாக்கி, தோட்டாக்களையும் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். தங்கல்தான் நடத்தி வரும்பள்ளிக்கூட மாணவர்களுக்கு சீருடை வாங்குவதற்காக விமானத்தில் பெங்களூரு சென்று அங்கிருந்து அமிர்தசரஸ் செல்வதற்காக வந்ததாக கூறினார். அவர் வைத்திருந்ததது அவரது தந்தை வைத்திருந்த துப்பாக்கி என்றும், காலையில் விமானத்துக்கு வர வேண்டிய அவசரத்தில் துப்பாக்கி இருந்த பையை மாற்றி எடுத்து வந்ததாகவும் போலீசில் தெரிவித்தார்.
கைது
கைத்துப்பாக்கி வைத்திருக்க அவரிடம் உரிமம் இல்லை. இதனை தொடர்ந்து ஆயுத தடை சட்டத்தின் கீழ் காங்கிரஸ் பிரமுகரை போலீசார் கைது செய்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடைபெறுகிறது.
இதற்கிடையில் காங்கிரஸ் பிரமுகர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி பீளமேடு போலீஸ் நிலையத்தை பாரதீய ஜனதா கட்சியினர் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story