2,500 ஆண்டுகள் பழமையான கல்வட்டம் கண்டுபிடிப்பு
கம்பம் அருகே 2,500 ஆண்டுகள் பழமையான கல்வட்டம் கண்டுபிடிக்கப்பட்டது.
தேனி:
தேனி மாவட்டம், கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள ஏகலூத்து பகுதியில் வைகை தொல்லியல் பண்பாட்டுக்கழக நிறுவனர் பாவெல்பாரதி தலைமையில், தொல்லியல் ஆர்வலர்கள் பாலதண்டாயுதம், முருகன், சிவராமன் உள்ளிட்டோர் கள ஆய்வு செய்தனர். அப்போது அங்கு ஒரு புளியந்தோப்பு அருகில் ஒரே தொடர் வரிசையில் கிழக்கு மேற்காக 3 கல்வட்டங்கள் மற்றும் 2 சிதிலமடைந்த கற்குவைகளும் இருப்பது கண்டறியப்பட்டது.
கரடுமுரடான ஒழுங்கற்ற கற்களால் அமைக்கப்பட்ட இந்த கல்வட்டங்கள் ஒவ்வொன்றும் சுமார் 28 முதல் 30 அடி விட்டம் கொண்டவை. கீழ்பக்கம் உள்ள கல்வட்டத்தில் குத்துக்கல் இல்லாமல் கல்வட்டம் மட்டும் உள்ளது. நடுவில் உள்ள கல்வட்டம் குத்துக்கல்லுடன் கூடியது. இதில் தரைக்கு மேல் சுமார் 3 அரை அடி உயரம், 3½ அடி அகலத்தில் ஒழுங்கற்ற இயற்கையான குத்துக்கல் நடப்பட்டுள்ளது. இதுகுறித்து வைகை தொல்லியல் பண்பாட்டுக்கழக நிறுவனர் பாவெல்பாரதியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தொல்குடி மக்கள் இறந்த குழுத்தலைவர்களை தாழி அல்லது கற்பதுக்கையில் வைத்து அடக்கம் செய்துவிட்டு, அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஒழுங்கற்ற கற்களை வட்டமாக அடுக்கி வைப்பதும், இறந்தவரின் நினைவாக குத்துக்கல் அமைப்பதும் வழக்கமாக இருந்தது. இந்த நினைவுச் சின்னங்களை பெரிய கற்களை கொண்டு அமைத்ததால் அக்காலம் பெருங்கற்காலமாக இருக்கலாம். இந்த நினைவுச் சின்னங்களை அவர்களது குழுவினரும், வம்சாவளியினரும் வணங்கி வந்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் அருகருகே 3 கல்வட்டங்களும், கற்குவைகளும் ஒரே இடத்தில் கிடைத்திருப்பது அரிதானதாகும். பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் இருக்கும் இப்பகுதியில் மக்கள் குடியிருக்கும் வாழ்விடம் இருந்திருக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story