தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 4 Jan 2022 9:27 PM IST (Updated: 4 Jan 2022 9:27 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்



தினத்தந்தி புகார் பெட்டிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
 
தார்சாலை அமைக்கப்படுமா? 

நெகமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் எதிரே உள்ள ரோடு மண்சாலையாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த சாலையில் பொதுமக்கள் நடந்து செல்லும் போது கண்களில் மண் துசுகள் படுகிறது. இதேபோல் மழை பெய்தால் சேறும்,சகதியுமாக காணப்படுவதால் வாகனங்கள் செல்லும் போது மிகவும் சிரமமாக உள்ளது. எனவே அந்த மண் சாலையில் தார் ரோடு அமைக்க வேண்டும், மேலும் அந்த வழித்தடத்தில் போக்குவரத்து வசதியும் செய்து தர வேண்டும். 
வேல், நெகமம்.

காலையில் ஒளிரும் மின்விளக்குகள்

பொள்ளாச்சி-கோட்டூர் ரோடு மேம்பாலம் மற்றும் அதனை சுற்றி உள்ளபகுதியில் போடப்பட்டுள்ள மின்விளக்குகள் காலை நேரத்தில் நல்ல வெளிச்சம் வந்தபிறகும் ஒளிர்ந்து வருகிறது. இந்த நிலை அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால், மின்சாரம் வீணாகிறது. இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்சாரத்தை சேமிக்க முன்வரவேண்டும்.
அக்பர், பொள்ளாச்சி.

தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் 

பொள்ளாச்சி-பல்லடம் மெயின்ரோடு புளியம்பட்டி, ராசக்காபாளையம் பகுதியில் உள்ள குப்பை தொட்டிகள் மற்றும் ஆங்காங்கே கொட்டப்பட்டு வரும் குப்பைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் மிக அதிக அளவில் தேங்கி கிடக்கிறது. இந்த குப்பைத் தொட்டிகளில் எச்சில் இலை மற்றும் மீதமான உணவுகளை தேடும் ஆடு, மாடு கால்நடைகள் வயிற்றில் பிளாஸ்டிக்கழிவுகள் சென்று அவைகளை மிகவும் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகளை கொட்டுபவர்களை கண்டறிந்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழனிசாமி, பொள்ளாச்சி.

தெருநாய்கள் தொல்லை

கோவை செல்வபுரம் முத்துசாமி காலனியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக இருக்கிறது. கூட்டங்கூட்டமாக செல்லும் தெருநாய்கள் சாலை யில் படுத்துக்கொண்டு அந்த வழியாக செல்பவர்களை துரத்துகிறது. சாலையில் நடந்து சென்ற ஒரு குழந்தையை கடித்துவிட்டது. எனவே தெருநாய்களின் அட்டகாசம் அதிகரிப்பதற்கு முன்பே அவற்றை கட்டுப்படுத்த வேண்டும்.
நாகராசன், செல்வபுரம். 

தெருவிளக்குகள் வேண்டும் 

நீலகிரி மாவட்டம் பந்தலூர் உப்பட்டியில் இருந்து பூதாளக்குன்னு வழியாக பெருங்கரை, நெல்லியாளம் அரசு தேயிலை தோட்டம் பகுதிக்கு செல்லும் சாலை உள்ளது. இங்கு ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகிறார்கள். ஆனால் அங்கு தெருவிளக்குகள் வசதி இல்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து இருப்பதால், நடந்து செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே தெருவிளக்குகள் வசதியை ஏற்படுத்த வேண்டும்.
குமார், உப்பட்டி. 

குவிந்து கிடக்கும் குப்பைகள்

கோவை உக்கடம் புல்லுக்காடு ஹவுசிங் யூனிட் பகுதியில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. அவை சுத்தம் செய்யப்படாமல் இருப்பதால், காற்று வீசும்போது காற்றில் பறந்து வீடுகளுக்குள் வருகிறது. அத்துடன் தெருநாய்கள் அதிகளவில் அங்கு சூழ்ந்து குப்பைகளை சாலையில் கொண்டு வந்து போடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்.
கந்தவேல், உக்கடம்.

இடவசதி இல்லாத சுகாதார நிலையம்

கோவை திருச்சி ரோட்டில் உள்ள சுங்கம் ஆரம்ப சுகாதர நிலையத்தில் கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகள் அமர போதிய இடவசதி இல்லை. இதனால் இங்கு சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிகள் அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து இங்கு போதிய வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
பாத்திமா, கோவை. 

கேபிள் ஒயர்களால் விபத்து 

கோவை கணபதி கணேஷ் லே-அவுட் 3-வது வீதியில் கேபிள் ஒயர்கள் ஆங்காங்கே அறுந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் விபத்தும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அறுந்து கிடக்கும் கேபிள் ஒயர்களை அகற்ற வேண்டும். 
செந்தில்குமார், கணபதி. 

நடுரோட்டில் மின்கம்பம் 

அன்னூர் தென்னம்பாளையம் சின்னையசெட்டி வீதியில் உள்ள சாலையில் நடுப்பகுதியில் மின்கம்பம் உள்ளது. இதனால் இந்த வழியாக செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன், கார்களை கொண்டு செல்ல முடியாமல், அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் வேறு இடத்தில் நிறுத்தக்கூடிய நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நடுரோட்டில் நிற்கும் மின்கம்பத்தை அகற்றி, சாலையோரத்தில் வைக்க வேண்டும்.
ராஜா, தென்னம்பாளையம். 

சீரான குடிநீர் வேண்டும்

கோவை மாநகராட்சி 5-வது வார்டு விளாங்குறிச்சி கரட்டுமேடு பகுதியில் சரியான அளவுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுவது இல்லை. இதனால் இந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் குடிநீருக்காக பல இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த பகுதிக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். 
ஜெயபிரகாஷ், சரவணம்பட்டி. 


Next Story