அம்மாபேட்டை அருகே ரூ.44 கோடி மதிப்பில் ஆமை வேகத்தில் நடைபெறும் குடிசை மாற்று வாரிய கட்டிட பணி- மழையில் நனைந்து துருப்பிடித்த கம்பிகள்
அம்மாபேட்டை அருகே ரூ.44 கோடி மதிப்பில் ஆமை வேகத்தில் குடிசை மாற்று வாரிய கட்டிட பணி நடைபெறுகிறது. இந்த பணிக்கு பயன்படுத்தும் கம்பிகள் மழையில் நனைந்து துருப்பிடித்து கிடக்கின்றன.
அம்மாபேட்டை
அம்மாபேட்டை அருகே ரூ.44 கோடி மதிப்பில் ஆமை வேகத்தில் குடிசை மாற்று வாரிய கட்டிட பணி நடைபெறுகிறது. இந்த பணிக்கு பயன்படுத்தும் கம்பிகள் மழையில் நனைந்து துருப்பிடித்து கிடக்கின்றன.
ரூ.44.8 கோடி மதிப்பில்...
அம்மாபேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட சாணத்திக்கல்மேடு அருகே லட்சுமிபுரத்தில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ரூ.44.8 கோடி மதிப்பில் 464 குடியிருப்புகள் கட்ட திட்டமிடப்பட்டது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 29-ந் தேதி இதற்கான பணிகள் தொடங்கியது. சில நாட்களிலேயே பணியில் தொய்வு ஏற்பட்டது.
தற்போது ஒரு பகுதியில் மட்டும் அஸ்திவாரம் பறிக்கப்பட்டு தூண்கள் எழுப்பிய நிலையில் அப்படியே பணி பாதியில் நிற்கிறது. கட்டிட வேலைக்காக கொண்டுவந்து போடப்பட்டுள்ள கம்பிகள் மழையில் நனைந்து துருப்பிடித்து கிடக்கின்றன.
ஆமை வேகத்தில்
இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் பெற அம்மாபேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பொதுமக்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்களிடம் இருந்து தலா ரூ.1 லட்சம் பெறப்பட்டு சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான குடியிருப்பு வீடுகள் கட்டித் தரப்படுகின்றன. முதல் கட்டமாக 100 பேருக்கு அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. அதனைப் பெற்ற விண்ணப்பதாரர்கள் அதிலுள்ள விலாசத்திற்கு ரூ.1 லட்சத்தை முழுமையாகவோ அல்லது தவணை முறையிலோ வரைவோலையாக செலுத்தவேண்டும் என அனுமதிக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் வேலை தொடங்கி ஒரு வருடம் ஆகியும் பணி ஆமை வேகத்தில் நடைபெறுகிறது.
துருப்பிடித்த கம்பிகள்
இதுகுறித்து பயனாளிகள் கூறுகையில், 'அரசு பொதுமக்களின் நலனுக்காக சலுகை விலையில் வீடுகள் கட்டித் தருவது வரவேற்கத்தக்கது. அதனை தரமாக கட்டித் தருவது அரசின் கடமை. கட்டிட பணிக்காக கொண்டுவந்து போட்டுள்ள கம்பிகள் துருப்பிடித்துள்ளன. அதேபோல் தூண்களில் போட்டுள்ள கம்பிகளும் பலம் இழந்துவிட்டன. அதிலேயே தொடர்ந்து கட்டிடம் கட்டினால் எப்படி உறுதித்தன்மை கிடைக்கும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துருப்பிடித்த கம்பிகளை பயன்படுத்தாமல் புதிய கம்பிகளை கொண்டு கட்டிடம் கட்டும் பணிகளை விரைந்து தொடங்கவேண்டும்' என்றார்கள்.
Related Tags :
Next Story