இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு


இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
x
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
தினத்தந்தி 5 Jan 2022 6:09 PM IST (Updated: 5 Jan 2022 6:09 PM IST)
t-max-icont-min-icon

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

கோவை

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

1-1-2022-ந் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதன்பேரில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த 1-11-2021 முதல் 31-11-2021 வரை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்,நீக்குதல் மற்றும் திருத்தத்திற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதன் பேரில், இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. 

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சமீரன் தலைமை தாங்கி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் பிரமுகர்கள் முன்னிலையில் வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

42,266 வாக்காளர்கள்


இதன்படி இறுதி வாக்காளர் பட்டியலில் கோவை மாவட்டத்தில் 15,40,901 ஆண் வாக்காளர்களும், 15,91,654 பெண் வாக்காளர்களும் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 573 என மொத்தம் 31,33,128 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 50,253 பெண் வாக்காளர்கள் கூடுதலாக உள்ளனர்.
மேலும் 18 முதல் 19 வயது நிறைவடைந்த முதல் முறை ஓட்டு போடும் இளம் வாக்காளர்கள் 42,266 பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில் புதிதாக சேர்ந்த மொத்த வாக்காளர்கள் 48,563 பேர்.

கவுண்டம்பாளையம் தொகுதி

கோவை மாவட்டத்தில் அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக கவுண்டம்பாளையமும், குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக வால்பாறையும் (தனி தொகுதி) உள்ளது. இதன்படி கவுண்டம்பாளையம் தொகுதியில் 2 லட்சத்து 37 ஆயிரத்து 305 ஆண் வாக்காளர்களும், 2 லட்சத்து 39 ஆயிரத்து 21 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 141 என மொத்தம் 4 லட்சத்து 76 ஆயிரத்து 467 வாக்காளர்கள் உள்ளனர்.


வால்பாறை தனித்தகுதியில் 98 ஆயிரத்து 727 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 7 ஆயிரத்து 827 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 21 என மொத்தம் 2 லட்சத்து 6 ஆயிரத்து 575 வாக்காளர்கள் உள்ளனர். இந்த வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்தவர்கள் 6,884 பேர், முகவரி மாறி சென்றவர்கள் 5,012 பேர், பல முறைபதிவு செய்த 1,591 பேர் என 14,387 பேர் நீக்கப்பட்டு உள்ளனர். கோவை மாவட்டத்தில் மொத்தம் 3 ஆயிரத்து 508 வாக்குப்பதிவு மையங்கள் உள்ளன.

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், மற்றும் திருத்தத்திற்கான தொடர் திருத்தப் பணிகள் வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் நடைபெறும். மேலும் இணையதளம் மூலமாகவும் மனுக்களை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர்கள் ரவிச்சந்திரன், இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story