வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது


வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
x
வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
தினத்தந்தி 5 Jan 2022 6:19 PM IST (Updated: 5 Jan 2022 6:19 PM IST)
t-max-icont-min-icon

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

கோவை

கோவை நகர போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் போலீஸ் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. கடந்த 3-ந்தேதி இரவு 8.30 மணியளவில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன் வந்தது.
அதில் பேசிய ஆசாமி, குனியமுத்தூர் மற்றும் உக்கடம் பெரிய குளத்தில் வெடிகுண்டு வைத்து இருப்பதாகவும், சிலமணிநேரத்தில் வெடிக்க உள்ளதாகவும் கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்துவிட்டார்.

இதைத்தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் உக்கடம் பெரியகுளம், குனியமுத்தூர் ஆகிய பகுதிகளுக்கு சென்று மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக சோதனை செய்தனர். ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அது புரளி என்று தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம ஆசாமி யார்? என்று அவர் அழைத்த செல்போன் எண்ணை வைத்து போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது குனியமுத்தூர் செந்தமிழ் நகரை சேர்ந்த பீர்முகமது (வயது40) என்று தெரியவந்தது. 

இவருக்கு பச்சை மிளகாய் என்ற பட்டப்பெயரும் உள்ளது. குடிபோதையில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தெரிவித்தார். இதனை தொடர்ந்த அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பீர்முகமது ஏற்கனவே குடிபோதையில் மெரினா கடற்கரையில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்து கைதானவர் ஆவார். ஏற்கனவே பலமுறை இவர் வெடிகுண்டு புரளியை கிளப்பி கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 20 நாட்களுக்கு முன்புதான் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

 இந்தநிலையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து இதுபோன்று மிரட்டல் விடுத்துவருவதால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.


Next Story