தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ஆபத்தான மரம்
கோவை ராம் நகர் பகுதியில் சாலை ஓரத்தில் இருக்கும் ஒரு மரம் உடைந்து விழும் நிலையில் உள்ளது. மரத்தின் நடுப்பகுதி மிகவும் ஓட்டை விழுந்து இருக்கிறது. காற்று சிறிது வேகமாக அடித்தால் உடைந்து விபத்தை ஏற்படுத்திவிடும். எனவே ஆபத்தான நிலையில் உள்ள இந்த மரத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெட்டி அகற்ற வேண்டும்.
மணி, ராம்நகர்.
அடிப்படை வசதிகள் தேவை
கோத்தகிரி பேரூராட்சிக்குட்பட்ட கிருஷ்ணாபுதூர் கிராமத்தில் 140 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உரிய கழிப்பிட வசதி, சமுதாய கூடம், நடைபாதை, கழிவு நீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ், கோத்தகிரி.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
கோவை மாநகராட்சி 27-வது வார்டை சேர்ந்த அஞ்சுகம் நகர் மெயின் ரோட்டில் சாலையோரம் ஏராளமான குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளது. அந்த குப்பைகள் அகற்றப்படாததால், அவை அங்கு குவிந்து கிடக்கிறது. மேலும் அங்கு கூட்டமாக வரும் தெருநாய்கள் அந்த குப்பைகளை சாலையில் கொண்டு வந்து போட்டுவிடுவதால், அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்.
பிலிப், அஞ்சுகம் நகர்.
குண்டும் குழியுமான சாலை
பொள்ளாச்சி மார்கெட் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியு மாக காட்சியளிக்கிறது. இந்த சாலை வழியாகதான் பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு வாகனங்கள் செல்ல வேண்டும். இதனால் வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி கீழே விழுந்து காயங்களுடன் தப்பிச்செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
கந்தன், பொள்ளாச்சி.
ஒளிராத தெருவிளக்குகள்
கோவை 49-வது வார்டு ரத்தினபுரி சுப்பாத்தாள் வீதியில் தெருவிளக்கு கள் கடந்த 20 நாட்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுவதால், குற்ற சம்பவங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து உடனடியாக பழுதடைந்த தெருவிளக்குகளை ஒளிர செய்ய வேண்டும்.
ராஜா, ரத்தினபுரி.
பிளாஸ்டிக் கழிவுகளால் அவதி
கோவை குறிச்சி பகுதியில் வெங்கடாஜலபதி நகர் பகுதி உள்ளது. இப்பகுதியில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், செல்ல இடம் இல்லாததால் ஒரு இடத்தில் தேங்கி நிற்கிறது. அதில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகளும் உள்ளன. இதன் காரணமகா இங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே தொற்றுநோய் பரவுவதற்கு முன்பு இந்த கழிவுகளை அகற்றி, கழிவுநீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும்.
மணிகண்டன், குறிச்சி.
தினத்தந்தி செய்தி எதிரொலி:
குப்பைகள் சுத்தம் செய்யப்பட்டது
கோவை மாநகராட்சி 5-வது வார்டுக்கு உட்பட்ட கரட்டுமேடு அருகே உள்ள வி.கே.வி.நஞ்சப்பா நகரில் குப்பைகள் குவிந்து கிடந்தன. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர். இது குறித்து தினத்தந்தி புகார்பெட்டி பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன்பேரில் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து குப்பைகளை சுத்தம் செய்தனர். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.
ஜெயபிரகாஷ், கரட்டுமேடு.
மருந்துகள் இல்லை
கோவை கவுண்டம்பாளையம் யூனியன் அலுவலக சாலையில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு பலர் சிகிச்சைக்காக சென்று வருகிறார்கள். ஆனால் விபத்தில் ஏற்படும் சிறு காயங்களுக்கு சிகிச்சை பெற சென்றால் பஞ்சு, பேண்டேஜ் போன்ற சிறு சிறு மருந்துகள் இருப்பது இல்லை. இதனால் இங்கு செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து போதுமான மருந்துகளை அனுப்பி வைக்க வேண்டும்.
முருகேசன், கவுண்டம்பாளையம்.
நடைபாதையில் ஆக்கிரமிப்பு
பொள்ளாச்சி மார்க்கெட் ரோடு, வெங்கட்ரமணன் வீதி, நியூஸ் கீம் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள நடைபாதையில் ஆக்கிரமிப்பு அதிகரித்துவிட்டது. இதனால் இந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அவர்கள் சாலை ஓரத்தில் நடக்கும்போது விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.
வெங்கடேசன், பொள்ளாச்சி.
தெருநாய்கள் தொல்லை
கோவை சின்னவேடம்பட்டி குப்புசாமி லே-அவுட் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. கூட்டங்கூட்டமாக சுற்றும் இந்த தெருநாய்கள் இந்த வழியாக செல்பவர்களை துரத்தி கடிக்கிறது. இரவு நேரத்தில் அதிகளவில் ஊளையிடுவதால் பொதுமக்களுக்கு தொந்தரவாக இருக்கிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.
நவீன், சின்னவேடம்பட்டி.
Related Tags :
Next Story