பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும்
வால்பாறை நகரில் இருந்து எஸ்டேட் பகுதிகளுக்கு செல்லும் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
வால்பாறை
வால்பாறை நகரில் இருந்து எஸ்டேட் பகுதிகளுக்கு செல்லும் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பழுதடைந்த சாலை
வால்பாறையில் இருந்து பல்வேறு எஸ்டேட் பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் பெரியகல்லார், சேக்கல்முடி, முடீஸ், தோனிமுடி, காஞ்சமலை, வெள்ளமலைடாப், பன்னிமேடு, சிறுகுன்றா, ஈட்டியார், மானாம்பள்ளி ஆகிய எஸ்டேட் பகுதிகளுக்கு செல்லக்கூடிய அனைத்து சாலைகளும் மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.
இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். அரசு பஸ்களை தொடர்ந்து மோசமான சாலைகளில் இயக்குவதால், உதிரி பாகங்கள் அடிக்கடி பழுதாகி வருகிறது. சில நேரங்களில் பஸ்கள் மற்றும் தனியார் வாகனங்களின் டயர் பஞ்சராகி நடுவழியில் நின்று விடுகின்றன. மேலும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அடிக்கடி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர்.
நோயாளிகள் அவதி
எஸ்டேட் பகுதியில் இருந்து நோயாளிகள் அவசர சிகிச்சைக்காக எஸ்டேட் ஆம்புலன்ஸ்களிலும், 108 ஆம்புலன்ஸ்களிலும் வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதேபோல கர்ப்பிணி பெண்களும் பிரசவத்திற்காக ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லப்படுகின்றனர்.
இவ்வாறு செல்பவர்கள் குண்டும், குழியுமான சாலையால் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே குண்டும், குழியுமான சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
சாலைகளை சீரமைக்க வேண்டும்
வால்பாறை எஸ்டேட் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு வால்பாறை நகர் பகுதிக்கு தான் வரவேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் வால்பாறையில் இருந்து எஸ்டேட் பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. இதனால் தினந்தோறும் கல்லூரி, பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
மேலும் அந்த சாலைகளில் அரசு பஸ்களை இயக்குவதால், பஸ்கள் அடிக்கடி பழுதடைந்து போக்குவரத்து கழகத்திற்கு தேவையில்லாத பண இழப்பு ஏற்படுகிறது.
தற்போது வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அவைகளை விரட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைவாக வர முடியவில்லை. மேலும் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சாலைகளை விரைந்து சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story