நெல்லை மாவட்டத்தில் 2,500 படுக்கைகள் தயார்-கலெக்டர் விஷ்ணு தகவல்
கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள நெல்லை மாவட்டத்தில் உள்ள ஆஸ்பத்திரிகளில் 2 ஆயிரத்து 500 படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக கலெக்டர் விஷ்ணு கூறினார்.
நெல்லை:
கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள நெல்லை மாவட்டத்தில் உள்ள ஆஸ்பத்திரிகளில் 2 ஆயிரத்து 500 படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக கலெக்டர் விஷ்ணு கூறினார்.
இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
6 பேருக்கு அறிகுறி
நெல்லை மாவட்டத்தில் 6 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறிகள் இருப்பதாக ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இவர்கள் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள். இவர்களுடைய மாதிரி சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் உறுதி செய்யப்படவில்லை. நெல்லை மாவட்டத்தில் ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டவர்கள் யாரும் இல்லை.
ஒமைக்ரான் தொடர்பாக அரசு பல்வேறு விதிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி அவர்கள் வீட்டு தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கொரோனா 2-வது அலையின்போது இயங்கியது போன்று கொரோனா கட்டுப்பாட்டு அறை செயல்படும். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து ஆலோசனைகள் வழங்கப்படும். எனினும் அச்சப்படும் சூழ்நிலை இப்போது இல்லை.
2,500 படுக்கைகள்
நெல்லை மாவட்டத்தில் கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள ஆஸ்பத்திரிகளில் 2,500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கூடிய 1,000 படுக்கைகள் தயார் நிலையில் வைத்துள்ளோம். காந்திமதி பள்ளிக்கூடத்தில் முன் பரிசோதனை மையம் முன்புபோல் அமைக்கப்பட்டு நோயின் தாக்கத்தை பொறுத்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும்.
கூடங்குளம் அரசு மருத்துவமனை, நெல்லை மாநகராட்சி கொரோனா தடுப்பு மையங்கள் என மாவட்டத்தில் 8 கொரோனா பாதுகாப்பு மையங்களும் தயார் நிலையில் உள்ளன. தற்காலிக பாதுகாப்பு மையங்கள் அமைக்கவும் தயார் நிலையில் உள்ளோம்.
இணைய வசதி
கடந்த முறை நோயாளிகள் இருக்கின்ற வார்டுகளுக்கு இணைய வசதி மூலம் பேசும் வசதி செய்யப்பட்டு இருந்தது. இந்த முறை ஒவ்வொரு படுக்கையில் இருப்பவர்களும் இணைய வசதி மூலம் பேசுவதற்கு தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது நாள் ஒன்றுக்கு 2,000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது 3 ஆயிரம் பரிசோதனைகளாக அதிகரிக்கப்படும்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் சோதனைச் சாவடிகளும் உஷார்படுத்தப்பட்டு அங்கு வருபவர்களுக்கு பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது தொற்று கண்டறியப்படும் அனைவருக்கும் கொரோனாவுக்கான எந்தவித அறிகுறியும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே பிரேசில் நாட்டில் இருந்து திசையன்விளை பகுதிக்கு வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பதாக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். அவருடைய மாதிரி சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
Related Tags :
Next Story