வருகிற 10-ந் தேதி முதல் சுகாதார பணியாளர்கள்-மூத்த குடிமக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி - மந்திரி சுதாகர் பேட்டி
கர்நாடகத்தில் சுகாதார பணியாளர்கள்-மூத்த குடிமக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி வருகிற 10-ந் தேதி தொடங்குவதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.
பெங்களூரு:
சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களுருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
சுகாதார பணியாளர்கள்
சுகாதார பணியாளர்கள் அதாவது டாக்டர்கள், நர்சுகள், மூத்த குடிமக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது. இந்த பணி வருகிற 10-ந் தேதி தொடங்குகிறது. கொரோனா பரவலை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளோம். இதில் உள்நோக்கம் இல்லை. வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே எங்களின் நோக்கம்.
அதனால் அரசியல் கட்சிகள், பிற அமைப்புகள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும். அனைத்து தரப்பினரும் சுகாதார நெருக்கடி நிலையை புரிந்துகொள்ள வேண்டும். கொரோனா 3-வது அலை அதிவேகமாக பரவுகிறது. எவ்வளவு வேகமாக பரவுகிறதோ அதே வேகத்தில் அது குறையும்.
அவசியம் இல்லை
அதனால் 6 வாரங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொற்று உறுதியானதும் யாரும் ஆதங்கப்பட தேவை இல்லை. அனைவரும் ஆஸ்பத்திரியில் சேர வேண்டிய அவசியம் இல்லை. அறிகுறிகள் குறைவாக உள்ளவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.
இந்த வைரஸ் மூக்கு வழியாக தொண்டை வரை மட்டுமே செல்கிறது. அது நுரையீரலை தாக்குவதற்கான வாய்ப்பு மிக குறைவு என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். 15 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் கர்நாடகம் 3-வது இடத்தில் உள்ளது.
சட்டம் தனது கடமையை செய்யும்
திட்டமிட்டப்படி 10 முதல் 15 நாட்களில் சிறுவர்களுக்கு தடுப்பூசி போட்டு முடிக்கப்படும். 28 நாட்களுக்கு பிறகு 2-வது டோஸ் தடுப்பூசி போடப்படும். கொரோனா வேகமாக பரவுவதால் காங்கிரசார் மேகதாது பாதயாத்திரையை நடத்த மாட்டார்கள் என்று நினைக்கிறேன். ஒருவேளை பாதயாத்திரை நடத்தினால் சட்டம் தனது கடமையை செய்யும்.
இவ்வாறு சுதாகர் கூறினார்.
Related Tags :
Next Story