கர்நாடகத்தில் மாநில எல்லைகளை மூடும் திட்டம் இல்லை - மந்திரி அஸ்வத் நாராயண் பேட்டி
கர்நாடகத்தில் மாநில எல்லைகளை மூடும் திட்டம் இல்லை என்று மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.
பெங்களூரு:
கர்நாடக உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மூடும் திட்டம் இல்லை
கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. மராட்டியம், கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. அதனால் பிற மாநிலங்களில் இருந்து வருபவர்கள், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டுவர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் அவர்கள் 2 டோஸ் தடுப்பூசியும் போட்டிருக்க வேண்டும்.
அதே நேரத்தில் பிற மாநிலங்களுக்கும் சாலைகளில் கர்நாடக மாநில எல்லைகளை மூடும் திட்டம் இல்லை. நிலைமை கைமீறி செல்லக்கூடாது என்ற காரணத்தினால் வார இறுதி நாள் ஊரடங்கு உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளோம். முழுமையான ஊரடங்கு அமல்படுத்தும் நிலை வரக்கூடாது என்ற நோக்கத்தில் தான் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பூஸ்டர் தடுப்பூசி
தியேட்டர்கள், மதுபான விடுதிகள், கேளிக்கை விடுதிகள், உணவகங்களில் 50 சதவீதம் பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 15 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதனால் யாரும் ஆங்கப்பட தேவை இல்லை. அரசின் விதிமுறைகளை பொதுமக்கள் அனைவரும் தவறாமல் பின்பற்ற வேண்டும்.
சுகாதார பணியாளர்களுடன் மருத்துவ கல்லூரி மாணவர்கள் மற்றும் அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது. 10 நாட்களுக்கு பிறகு மீண்டும் அதிகாரிகளுடன் அரசு ஆலோசனை நடத்தி கட்டுப்பாடுகளை நீடிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.
Related Tags :
Next Story