மகளை கொன்று விட்டு பெண் தற்கொலை


மகளை கொன்று விட்டு பெண் தற்கொலை
x
தினத்தந்தி 6 Jan 2022 7:19 PM IST (Updated: 6 Jan 2022 7:19 PM IST)
t-max-icont-min-icon

மகளை கொன்று விட்டு பெண் தற்கொலை


துடியலூர்

குடுகுடுப்பைக்காரரின் வாக்கு பலித்துவிடுமோ என்ற அச்சத்தில் மகளை கொன்று விட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது

குடும்ப பிரச்சினை

கோவையை அடுத்த துடியலூர் அப்பநாயக்கன்பாளையம் பார்க் சிட்டியை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது53). 

இவருடைய கணவர் திருமூர்த்தி. இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுடைய மகன் சசிக்குமார் (34). இவர், ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். 

இவர், திருமணமாகி மனைவியுடன் சரவணம்பட்டியில் குடியிருந்து வந்தார். குடும்ப தகராறு காரணமாக சசிக்குமாரின் மனைவி பிரிந்து சென்று விட்டார். 

அவர் தனது கணவர் சசிக்குமாருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதாக தெரிகிறது.

குடுகுடுப்பைக்காரரின் வாக்கு

இந்த நிலையில், தனலட்சுமி, மனநிலை சரி இல்லாத தனது மகள் சுகன்யாவுடன் (31) வசித்து வந்தார். 

இதற்கிடையே கடந்த 2 நாட்க ளுக்கு முன்பு இரவு தனலட்சுமியின் வீட்டுக்கு குடுகுடுப்பைக்காரர் வந்துள்ளார். 

அவர், வீட்டில் தோஷம் இருப்பதாகவும், அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும். இல்லை என்றால் கை, கால் வராமல் போய் விடும், 

குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் பிரச்சினை ஏற்படும் என்று வாக்கு சொன்னதாக தெரிகிறது.

விஷம் கொடுத்து கொலை

இந்த நிலையில் தனது மகனுக்கு மருமகள் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியது தனலட்சுமிக்கு மனக்கவலை ஏற்படுத்தியது. 

இதைத் தொடர்ந்து குடுகுடுப்பைக்காரன் சொன்னது போல் தனக்கும் பாதிப்பு ஏற்படுமோ என்று தனது மகனிடம் கூறி வருத்தப்பட்டு உள்ளார்.

அதற்கு அவருடைய மகன் ஆறுதல் கூறியுள்ளார். ஆனாலும் மகன் மற்றும் மகளை நினைத்து மிகவும் கவலைப்பட்ட தனலட்சுமி வாழ்க் கையில் விரக்தி அடைந்தார். 

இதையடுத்து அவர், நேற்று இரவு தனது மகள் சுகன்யாவுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்தார். 

அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் சுகன்யா பரிதாபமாக இறந்தார்.

தூக்குப்போட்டு தற்கொலை

அதை உறுதி செய்து கொண்ட பிறகு தனலட்சுமி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இந்த நிலையில் நேற்று சசிக்குமார் தனது தாய் தனலட்சுமியை செல்போனில் அழைத்தார். ஆனால் அவர் போனை எடுக்க வில்லை. 

இதனால் அவர், அருகில் உள்ளவர்களுக்கு போன் செய்து சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.

உடனே அவர்கள் சென்று பார்த்த போது, தனலட்சுமி மற்றும் சுகன்யா ஆகியோர் பிணமாக கிடந்தனர். 

இதை அறிந்த சசிக்குமார் வீட்டுக்கு விரைந்து வந்து தனது தாய் மற்றும் சகோதரியின்  உடல்களை பார்த்து கதறி அழுதார்.

விசாரணை

இது குறித்த தகவலின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜபாண்டியன், மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

 இது குறித்து துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story