திருவள்ளூர் அருகே நண்பர் இறந்த துக்கத்தில் கல்லூரி மாணவர் தற்கொலை


திருவள்ளூர் அருகே நண்பர் இறந்த துக்கத்தில் கல்லூரி மாணவர் தற்கொலை
x
தினத்தந்தி 6 Jan 2022 9:32 PM IST (Updated: 6 Jan 2022 9:32 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே நண்பர் இறந்த துக்கத்தில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நண்பர் சாவு

திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டைமாநகர் பகுதியில் வசித்து வருபவர் பாசூரான். இவரது மகன் மில்டன் என்கிற அப்பு (வயது17). இவர் பூந்தமல்லியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் தன்னுடன் 11-ம் வகுப்பு முதல் ஒன்றாக படித்து வந்த அரக்கோணம் அடுத்த புளியமங்கலம் பகுதியை சேர்ந்த நண்பர் உதயகுமார் கடந்த நவம்பர் மாதம் 5-ந்தேதியன்று இறந்துவிட்டார்.

தற்கொலை

நண்பர் இறந்தது முதல் மில்டன் வருத்தத்தில் இருந்து வந்தார். நண்பரின் இறப்பை ஏற்றுகொள்ள முடியாமல் சில நாட்களுக்கு முன்பாக மில்டன் தற்கொலை செய்துகொள்ள முயன்றார். இதை பார்த்த அவரது பெற்றோர் மில்டனை சமாதானப்படுத்தி ஆறுதல் கூறி தேற்றினர்.

இருப்பினும் நண்பரின் மறைவு மில்டனின் மனதைவிட்டு அகலவில்லை. இறந்து போன நண்பரை நினைத்து அழுது புலம்பி வந்தார்.

நேற்று அதிகாலையில் மில்டன் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் உடனடியாக மில்டனை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மில்டன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story