தஞ்சையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1,274 போலி மதுபாட்டில்கள் பறிமுதல்


தஞ்சையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1,274 போலி மதுபாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 7 Jan 2022 1:39 AM IST (Updated: 7 Jan 2022 1:39 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கின்போது விற்பனை செய்வதற்காக தஞ்சையில், வீடு வாடகைக்கு எடுத்து பதுக்கி வைத்து இருந்த 1,274 போலி மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பார் உரிமையாளர் உள்பட 3 பேரை கைது செய்தனர்.

தஞ்சாவூர்:
ஊரடங்கின்போது விற்பனை செய்வதற்காக தஞ்சையில், வீடு வாடகைக்கு எடுத்து பதுக்கி வைத்து இருந்த 1,274 போலி மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பார் உரிமையாளர் உள்பட 3 பேரை கைது செய்தனர்.
போலீசார் தீவிர கண்காணிப்பு
தஞ்சையில், போலி மதுபானங்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக தஞ்சை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமாருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு தனிப்படை போலீசாருக்கு டி.ஐ.ஜி. உத்தரவிட்டார்.
அதன்பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மகேந்திரன், கண்ணன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கந்தசாமி, ஏட்டுகள் இளையராஜா, விஜய், சுந்தர்ராமன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
வீட்டில் பதுக்கி வைத்து இருப்பதாக...
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து தமிழக அரசு நேற்று முதல் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. மேலும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத்தலங்களை திறக்க தடை விதித்துள்ளதோடு, ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கத்தையும் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கத்தின்போது விற்பனை செய்வதற்காக தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே ஒரு வீட்டில் மதுபானங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 
போலி மதுபாட்டில்கள்
அதன்பேரில் போலீசார் அந்த வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். இந்த சோதனையின்போது அங்கு 32 அட்டைப்பெட்டிகளில் மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது. அந்த மதுபான பாட்டில்களில் பெரும்பாலானவை புதுச்சேரி மதுபாட்டில்கள் ஆகும். 
இந்த மதுபாட்டில்களுடன், கலப்பட மதுவும் சேர்த்து தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யும் மதுபாட்டில்கள் போல போலியாக தயார் செய்து வைத்து இருந்தது தெரிய வந்தது.
ரூ.3 லட்சம் மதிப்பு
இதையடுத்து போலீசார் அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1274 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். 
பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
பார் உரிமையாளர் உள்பட 3 பேர் கைது
இது தொடர்பாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த பார் உரிமையாளர் கமல் மற்றும் அங்கு வேலை பார்த்த பிரசாந்த், பிரபாகரன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் தனிப்படை போலீசார் கைதானவர்களையும், மதுபாட்டில்களையும் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசில் ஒப்படைத்தனர். மேலும் போலி மதுபானங்கள் பதுக்கி வைத்திருந்த குடோனுக்கும் போலீசார் ‘சீல்’ வைத்தனர்.

Next Story