செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களுக்காக 70 படுக்கைகள் தயார்


செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களுக்காக 70 படுக்கைகள் தயார்
x

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களுக்காக 70 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்தார்.

கலெக்டர் ஆய்வு

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அங்கு செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை டாக்டர்களிடம் கேட்டறிந்ததுடன் நேரில் சென்று பார்வையிட்டார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

குரோம்பேட்டை எம்.ஐ.டி.யில் 67 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுபோல தாம்பரம் சென்னை கிறித்தவ கல்லூரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவ- மாணவிகள் தனிமைபடுத்தப்பட்டு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

70 படுக்கைகள் தயார்

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் 32 ஆக்ஸிஜன் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. ஒமைக்ரான் தொற்று பாதிக்கப்பட்டால் அவர்களுக்கென 70 படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளன. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 439 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன என்றும் ஒட்டல்கள், தனியார் நிறுவன பஸ்கள், பொதுமக்கள் அதிக அளவில் கூடும் 
இடங்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வருவாய் துறை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோல அனைத்து கோவில்களும் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 3 நாட்கள் மூடப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படும். தனியார் நிறுவன பஸ்களில் 50 சதவீத நபர்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் இதுவரை ஒமைக்ரான் தொற்றால் யாரும் சிகிச்சை பெறவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது செங்கல்பட்டு மாவட்ட டாக்டர்கள் சங்க தலைவர் மோகன்குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.


Next Story