திருவள்ளூர் அருகே சேதமடைந்த பள்ளி கட்டிடத்துக்கு பதில் மற்றொரு கட்டிடம் இடிப்பு; ஒன்றிய கவுன்சிலர் கைது
கடம்பத்தூர் அருகே சேதமடைந்த பள்ளி கட்டிடத்துக்கு பதில் மற்றொரு பள்ளி கட்டிடத்தை இடித்த அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலரை போலீசார் கைது செய்தனர்.
ஒன்றிய கவுன்சிலர்
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஊராட்சிக்குட்பட்ட வெண்மனம்புதூர் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி சேதமடைந்திருந்தது. இந்த கட்டிடத்தை இடிப்பதற்கு கடம்பத்தூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து இடிப்பதற்கு அனுமதியும் கொடுக்கப்பட்டிருந்தது.
இந்த தீர்மானத்தின்படி இடிக்கப்பட வேண்டிய கட்டிடத்துக்கு பதிலாக அருகிலிருந்த வேறு பள்ளி கட்டடத்தை கடம்பத்தூர் 2-வது வார்டு அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் (வயது 42) பொக்லைன் எந்திரம் மூலம் கடந்த டிசம்பர் மாதம் 9-ந் தேதி இடித்து தள்ளினார்.
கைது
இதனையடுத்து அனுமதியின்றி அரசு பள்ளி கட்டிடத்தை இடித்து தள்ளிய ஒன்றிய கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராம்குமார் கடம்பத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த அ.தி.மு.க. கவுன்சிலர் சுரேஷ் திருப்பதி கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தனிப்படை போலீசார் திருப்பாச்சூர் பகுதியில் அவரை சுற்றிவளைத்து கைது செய்தனர்.
Related Tags :
Next Story