‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 8 Jan 2022 8:02 PM IST (Updated: 8 Jan 2022 8:02 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 9962818888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான புகார்கள் வருமாறு:-

மதுப்பிரியர்கள் தொல்லை

சுல்தான்பேட்டை ஒன்றியம் ஜல்லிபட்டி பி.ஏ.பி. வாய்க்கால் கரை நடுவில் அமர்ந்து சிலர் காலை மற்றும் மாலை வேளைகளில் மது அருந்துகின்றனர். மேலும் காலி மதுபாட்டில்களை வாய்க்காலிலும், சாலையிலும் போட்டு உடைக்கின்றனர். இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மற்றும் நடந்து செல்பவர்கள் மிகவும் அவதி அடைகின்றனர். எனவே மதுப்பிரியர்கள் தொல்லையை போக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பழனி, செஞ்சேரிமலை.

போக்குவரத்து நெரிசல்

ஊட்டி கலெக்டர் அலுவலகம் அருகே கமிஷனர் சாலை செல்கிறது. இந்த சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால் இருபுறமும் வந்து செல்லும் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. பொதுமக்கள் சாலையின் நடுவே நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் நீடிக்கிறது. ஆகவே, ஒதுக்கப்பட்ட இடத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.

ராதா, ஹில்பங்க், ஊட்டி.

காட்டுப்பன்றிகள் நடமாட்டம்

ஊட்டி புதுமந்து பகுதியில் காட்டுப்பன்றிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. வீடுகளுக்கு முன்பு சிறுவர்-சிறுமிகள் விளையாடுகின்றனர். உணவு கழிவுகளை தின்ன வரும் காட்டுப்பன்றிகள் திடீரென அவர்களை துரத்துவதால் பொதுமக்கள் அச்சமடைகின்றனர். எனவே குடியிருப்புகளுக்குள் புகுந்து வரும் காட்டுப்பன்றிகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராகவன், புதுமந்து, ஊட்டி.

வாகனங்களால் இடையூறு

கோவை கலெக்டர் அலுவலகத்தில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ‘நோ பார்க்கிங்’ பகுதிகளில் கூட வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் மற்றவர்கள் எளிதில் செல்ல முடியவில்லை. எனவே இடையூறு ஏற்படாமல் சரியான இடத்தில் வாகனங்களை நிறுத்த அதிகாரிகளும், போலீசாரும் அறிவுறுத்த வேண்டும்.

சுப்பிரமணியம், கோவை.


கால்வாயில் அடைப்பு

பொள்ளாச்சி வெங்கடேசா காலனி தர்மலிங்கம் வீதியில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் முறையாக தூர்வாரப்படாததால் கழிவுநீர் சாலையில் வழிந்தோடி தேங்கி உள்ளது. இதனால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவ வாய்ப்பு இருக்கிறது. எனவே அந்த சாக்கடை கால்வாயை தூர்வாரி முறையாக பராமரிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

ஜெயபால், பொள்ளாச்சி.

நல்ல தண்ணீர் வேண்டும்

கோவை மாநகராட்சி 97-வது வார்டு பிள்ளையார்புரம் பகுதியில் உப்பு தண்ணீரே குடிநீராக வினியோகிக்கப்படுகிறது. மேலும் அந்த தண்ணீரை குடிக்க முடியவில்லை. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே நல்ல தண்ணீரை குடிநீராக வினியோகிக்க வேண்டும். 

கீதா லட்சுமி, பிள்ளையார்புரம்.

சேறும், சகதியுமான சாலை

கோவை மாநகராட்சி விளாங்குறிச்சி லட்சுமி நகரில் ஸ்ரீநகர் குடியிருப்பு பகுதியில் உள்ள சாலை மண் சாலையாக உள்ளது. மழைக்காலங்களில் அந்த சாலையில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் சாலையின் இருபுறங்களிலும் முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. எனவே அந்த சாலையை தார்சாலையாக மாற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.

விஜய், விளாங்குறிச்சி.


அடிக்கடி விபத்துகள்

பொள்ளாச்சி நகரில் கோட்டூர் சாலையில் உள்ள மேம்பாலத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. அங்கு தெற்கு பகுதியில் இருந்து வரும் இருசக்கர வாகனங்கள் மேம்பாலத்தில் செல்லாமல் அருகில் உள்ள சுரங்கப்பாதை வழியாக நகருக்குள் வந்தால் விபத்தை தவிர்க்க முடியும். எனவே அதற்கு ஆவண செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும்.

முருகன், பொள்ளாச்சி.

மைதானம் அமைக்கப்படுமா?

கோவை மாநகராட்சி 43-வது வார்டு வெங்கடாபுரம் பகுதியில் உள்ள மேற்கு வசந்தம் நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான 55 சென்ட் நிலம் காலியாக உள்ளது. இந்த காலி இடத்தை சிலர் ஆக்கிரமிக்க முயற்சிக்கின்றனர். மேலும் அங்கு இளைஞர்கள் விளையாடுவதற்கு புதிய மைதானம் இல்லாமல் உள்ளது. எனவே அந்த காலியிடத்தில் சிறிய விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும்.

முகேஷ், வெங்கடாபுரம்.



குண்டும், குழியுமான சாலை 
தொண்டாமுத்தூர் அருகே இக்கரை போளுவாம்பட்டியில் இருந்து ஏழுவாய்க்கால் வழியாக செம்மேடு செல்லும் சாலை பழுதடைந்து மிகவும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுப்பிரமணியம், தொண்டாமுத்தூர்.

1 More update

Next Story