ஸ்ரீபெரும்புதூர் அருகே மதுபாட்டில்கள் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து
ஸ்ரீபெரும்புதூர் அருகே மது பாட்டில்கள் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஸ்ரீபெரும்புதூர்,
திருவள்ளூர் மாவட்டம் திருமலையில் உள்ள மதுபான கிடங்கில் இருந்து மதுபாட்டில்களை லாரியில் ஏற்றி கொண்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு வினியோகம் செய்ய எடுத்து செல்லப்பட்டது. லாரி ஸ்ரீபெரும்புதூர் அருகே ஏரிக்கரை அருகே சென்றபோது நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் லாரியின் பின்னால் அமர்ந்திருந்த மார்த்தாண்டம் என்ற வாலிபர் லாரியின் அடியில் சிக்கினார். இதனை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்க தொடர்ந்து போராடினர். முடியாததால் ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொக்லைன் எந்திரங்களை வரவழைத்து லாரி அடியில் சிக்கி உயிருக்கு போராடிய மார்த்தாண்டத்தை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த விபத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் சாலையில் உடைந்து மது ஆறாக ஓடியது. இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Related Tags :
Next Story