திருக்கோவிலூர் அருகே பரபரப்பு இறந்து போனவர்களின் பெயர்களை சேர்த்து ஊரக வேலை திட்டத்தில் மோசடி


திருக்கோவிலூர் அருகே பரபரப்பு  இறந்து போனவர்களின் பெயர்களை சேர்த்து ஊரக வேலை திட்டத்தில் மோசடி
x
தினத்தந்தி 9 Jan 2022 4:32 PM GMT (Updated: 9 Jan 2022 4:32 PM GMT)

திருக்கோவிலூர் அருகே ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் இறந்து போனவர்களின் பெயர்களை பயனாளிகள் பட்டியலில் சேர்த்து மோசடி செய்தது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்


திருக்கோவிலூர்

புகார் மனு

திருக்கோவிலூர் அருகே உள்ள செங்கணாங்கொல்லை கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு புகார் மனு அனுப்பி உள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

இறந்து போனவர்களின் பெயர்

செங்கணாங்கொல்லை கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பயனாளிகளுக்கான அட்டையில் குடும்பத்துக்கு சம்பந்தமில்லாத வேறு ஒரு நபரின் பெயரை சேர்த்து அவருக்கு வேலை கொடுத்ததாக பதிவு செய்து பண மோசடி நடைபெற்று இருக்கிறது. 
இதில் பள்ளி, கல்லூரி, செல்லும் மாணவர்கள், இறந்து போனவர்கள், ஊரில் இல்லாதவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் ஆகியோரின் பெயர்களை பயனாளிகள் பட்டியலில் சேர்த்து அவர்கள் 100 நாள் வேலை செய்ததாக மோசடி நடைபெற்றுள்ளது. எனவே இது குறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

விசாரணைக்கு உத்தரவு

இதுகுறித்து திருக்கோவிலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரேச்சல் கலைச்செல்வியிடம் கேட்டபோது, இந்த புகாரின் உண்மைத்தன்மை அறிய விசாரணை செய்யும்படி அதிகாரிகளிடம் கூறியிருக்கிறேன். விசாரணையின் முடிவில் மோசடி நடைபெற்றது ஆதாரத்துடன் தெரியவந்த பின் தவறு செய்தவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Next Story